சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, காளையார்கோவில் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டதால் கலெக்டரிடம் இழப்பீடு கோரினர்.
இளையான்குடி முனைவென்றி பகுதியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி மிளகாய் விவசாயம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் தரப்பில் இளையான்குடி, காளையார்கோவில் பகுதிகளில் நெற்பயிரை விட மிளகாய், வாழை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக மிளகாய் பயிரிட்டு காய்க்கும் நேரத்தில் செடிகள் அழுகிவிட்டதாகவும் தெரிவித்தனர். ஒரு ஏக்கருக்கு 1200 முதல் 1500 கிலோ மிளகாய் வத்தல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புதியதாக மிளகாய் பயிரிடும் சூழல் உள்ளது, என தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்ததாவது: பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து உரிய அலுவலர்களை கொண்டு கணக்கு எடுக்கப்படும். விவசாயிகளுக்கு நுாறு சதவீதம் அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அளவிடங்கான், சாலைக்கிராமம் ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்தார். அவருடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை, உதவி இயக்குநர்கள் சக்திவேல், தர்மன், வேளாண் துணை இயக்குநர் தனபால் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE