சிவகங்கை : அரசு விழாக்களில் காங்., - தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., ஒன்றிய, ஊராட்சி தலைவர்களை புறக்கணிப்பதால், அ.தி.மு.க.,- தி.மு.க.,வினர் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளன.
இப்பிரச்னையை கையாள முடியாமல் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.மாவட்டத்தில் சில மாதங்களாக ரேஷன் கடை, சமுதாய கூடம், மினி கிளினிக் திறப்பு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான விழா நடக்கிறது. இதில் பங்கேற்க ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள் மட்டுமின்றி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்., - தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி தலைவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் முறையாக அழைப்பு கடிதம் வழங்க வேண்டும். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆளுங்கட்சி க்ஷபிரதிநிதிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, மற்றவர்களை கண்டு கொள்வதில்லை.
அரசு விழாக்களில் மோதல் போக்கு: 2021 சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அரசு விழாக்களில் பிரச்னை அதிகரிக்கின்றன. காங்., - தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் எங்களை ஏன் அழைக்கவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. குன்றக் குடியில் ரேஷன் கடை, சாக்கோட்டையில் மினி கிளினிக், காரைக்குடியில் நலத்திட்ட உதவி வழங்கல், மானாமதுரையில் நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற நிகழ்ச்சிக்கு சென்ற கலெக்டரை முற்றுகையிட்டு காங்., - தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் புகார் அளித்து வருகின்றனர்.
குன்றக்குடி ரேஷன் கடை திறப்பு விழாவில் எம்.எல்.ஏ., பெரியகருப்பன், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேர்தல் தேதி எதிர்பார்ப்பு:தொடர்ந்து அரசு விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளை சில அதிகாரிகள் புறக்கணிப்பதால், இரு கட்சியினரிடையே மோதல் போக்கு அதிகரிக்கின்றன. இதனால் மாவட்ட நிர்வாகம் திணறுகிறது. 2021 சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவித்துவிட்டால், எந்தகட்சிக்கும் முக்கியத்துவம் தர தேவையிருக்காது. அது வரை பொறுமை காக்கும் நோக்கில் அதிகாரிகள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE