சிவகங்கை : '' ஊழல் அமைச்சர்களின் 2 ம் கட்ட பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் அதை கவர்னரிடம் ஒப்படைத்து,வரும் தேர்தலில் அ.தி.மு.க.,விடமிருந்து தமிழகத்தை மீட்போம்,'' என சிவகங்கை மாவட்டத்திற்கான இணையவழி கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது: சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை தலையிட்டும், தி.மு.க., கவுன்சிலர்கள் நிதானமாக நின்றதற்கு பாராட்டுக்கள். தி.மு.க., ஆட்சியில் சிவகங்கைக்கு ரூ.616 கோடி காவிரி குடிநீர் திட்டம், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி போன்று எண்ணற்ற திட்டம் வந்தது. அ.தி.மு.க., அரசு சிவகங்கைக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கியும், சிவகங்கைக்கான பங்கு நீரை அரசு இன்னும் பெற்றுத்தரவில்லை. முத்தலாக் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டம் கொண்டு வந்த பா.ஜ.,வை எதிர்க்காமல், அ.தி.மு.க., அரசு ஆதரவளித்தது. ஆனால் இன்றைக்கு தேர்தல் அச்சத்தில் சிறுபான்மையினருக்கு ஆதரவுடன் இருப்பதாக முதல்வர், துணை முதல்வர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
முதல்வர் பழனிச்சாமி, அவரது உறவினர்கள் மூலம் டெண்டர் எடுத்து செய்த ஊழல், துணை முதல்வருக்கு பணம் கொடுத்ததாக, அமெரிக்க நிறுவனம் தெரிவித்தது, அமைச்சர் ஜெயக்குமார் ரூ.30 கோடி ஊழல் செய்தது என ஊழல் அமைச்சர்கள் பட்டியல் ஆதாரத்துடன் கவர்னரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பட்டியல் தயாராகிறது. வேளாண் சட்டம் ரத்துகோரி போராடும் விவசாயிகளை பா.ஜ., அரசு கண்டு கொள்ளவில்லை. முதல்வர் இச்சட்டத்தை ஆதரித்து, விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார். இவ்வாறு பேசினார்.
502 பேர்களுக்கு பொற்கிழி: மாவட்ட அளவில் 102 இடங்களில் 'தமிழகம் மீட்போம்' இணைய வழி கூட்டம் நடந்தது. காரைக்குடியில் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் தலைமையில் கட்சியின் மூத்தநிர்வாகிகள் 502 பேர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொற்கிழி வழங்கினர். முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து,சேங்கை மாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE