தேனி : ''தேர்தலையொட்டி வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கட்சிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்'' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: ''நீதிமன்றம் பாக்கெட் எண்ணெய்தான் விற்க கூறியுள்ளது. 2011 உணவு பாதுகாப்பு சட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமில்லாத எண்ணெய் வித்துக்கள் எங்கு உற்பத்தியாகிறது என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாங்கி விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை கூடாது. தேனியில் மேம்பாலம் அமைக்கப்படுவதில் 2000 வியாபாரிகள் வாழ்வாதாரம் பற்றி சிந்திக்கவில்லை.
நெல்லை, துாத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் ஸ்மார்ட் சிட்டி பணி என மேம்பாலம், சாலை அமைப்பதால் பல ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். ரோடு, பால பணிகளை குறித்த காலத்தில் முடிப்பதாக உத்தரவாதம் அளிப்பதோடு, அதுவரை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். வணிகர் ஓட்டுக்களை ஓசையில்லாமல் ஒருங்கிணைக்கிறோம். 25 லட்சம் வணிகர்கள் 2.50 கோடி வாக்காளர்களை சந்திப்பார்கள். கட்சி துவங்கும் எண்ணம் இல்லை. நாங்கள் ஓட்டளித்தவர்கள்தான் ஆட்சியில் உள்ளனர்.
டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். ''வியாபாரிகள் பணம் வாங்காமல் ஓட்டளிக்க வேண்டும். வணிகர்கள் கை எப்போதும் மேல்நோக்கி இருக்க வேண்டும்'' என வணிகர் சங்க கூட்டத்தில் அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE