விருத்தாசலம்; பெரியகாப்பான்குளம் ஊராட்சியில் நடந்த தி.மு.க., சிறப்பு கிராம சபா கூட்டத்தில், அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்க பிரசாரத்தை உதயநிதி துவக்கி வைத்தார்.கம்மாபுரம் மேற்கு ஒன்றியம், பெரியகாப்பான்குளம் ஊராட்சியில், தி.மு.க., சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., ரமேஷ் எம்.பி., சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார்.மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி, 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.அவர் பேசியதாவது:தமிழகம் முழுதும் கிராம மக்களை நேரில் சந்தித்து, இந்த ஆட்சியில் மக்கள் படும் துயரங்களை கேட்டறிந்து, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்ற ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். கிராமங்கள் தோறும் அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் என்ற மாதிரி ஓட்டெடுப்பு நடத்தி, அதை தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைக்குமாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.முந்திரி சாகுபடி பிரதானமான இப்பகுதியில் மகசூலை அதிகரிக்கவும், அவற்றை எளிதாக விற்கவும், என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக வெளியேற்றப்படும் உபரிநீரை கிராமங்களுக்கு வழங்கவும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE