திருவெண்ணெய்நல்லுார்; விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார்-அரசூர் வரையிலான சாலையில் உள்ள மலட்டாற்று மாற்றுப்பாதையை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவெண்ணெய்நல்லுார் -அரசூர் சாலை கடலுார்-திருவண்ணாமலை செல்வதற்கான முக்கிய சாலையாகவும், 3 மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலையில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
இதனால் அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் பாலத்தின் அருகே உள்ள மலட்டாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்று பாதையில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் என நாளொன்றுக்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றது. கனரக வாகனங்கள் இவ்வழியாக செல்ல முடியாததால், வேறு வழியாக சென்று வருகின்றன.தற்காலிக மாற்று பாதையை அதிகாரிகள் சரியான முறையில் அமைக்கவில்லை. இந்த பாதையில் மின் விளக்குகள் இல்லாததால் நீண்ட துாரத்திற்கு இருள் சூழ்ந்துள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு பாதை சரியாக தெரியாததால் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதும், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் அவ்வழியாக பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் அப்பாதை முழுதும் தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறி அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.இந்த மாற்றுப் பாதையை சீர்செய்ய வேண்டுமென பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் கடந்த நவ.19ந் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அதன்பிறகு அதிகாரிகள் கண்துடைப்புக்காக அச்சாலையில் சில இடங்களில் மட்டும் கிராவல் கொட்டி வேலை செய்ததாக கணக்கு காட்டி விட்டனர்.சுரங்க பாதையின் அகலம் குறுகியதாக உள்ளதால் அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. மழைகாலங்களில் சுரங்க பாதை முழுதும் தண்ணீர் தேங்கி கனரக வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.எனவே பொதுமக்கள் நலன்கருதி விபத்துக்களை தடுக்கும் விதமாக தற்காலிக சாலையை முழுமையாக அகலப்படுத்தி, தார் சாலையாக மாற்றிடவும், மின்விளக்குகள் பொருத்தி மேம்படுத்திட வேண்டும். அதன்மூலம் கார், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்கள் நிரந்தரமாக இச்சாலையை பயன்படுத்திட வழி ஏற்படும்.அத்துடன் கனரக வாகனங்கள் புதிதாக அமைக்கப்படும் சுரங்க பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும் என்ற நடைமுறையை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்.
இப்படி செய்தால்மட்டுமே இச்சாலையில் ஏற்படும் தொடர் விபத்துகளை தவிர்க்க முடியும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாற்றுப்பாதையை சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE