கும்மிடிப்பூண்டி; மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகளால், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் என, 330 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்தவை.அதனால், மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும். அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.இருப்பினும், சில தொழிற்சாலைகள், எந்த விதிகளையும் மதிக்காமல், காற்று, நீர் மற்றும் நிலத்தை தொடர்ந்து மாசுபடுத்தி வருகின்றன.உற்பத்தியின் போது வெளியேறும் புகையை, பல கட்ட வடிகட்டுதல் முறைக்கு உட்படுத்தி, உயரமான புகை போக்கி வழியாக வெளியேற்ற வேண்டும். அதைத் தவிர்த்து, கூரை வழியாக கரும்புகையை வெளியேற்றுவதால், கும்மிடிப்பூண்டி பகுதி எப்போதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போல், தொழிற்சாலையைச் சுற்றியுள்ள நீர் நிலைகள், வீடுகள், மக்கள் கூடும் இடங்களில், கறுப்பு நிற துகள்கள் படர்ந்துக் காணப்படுகின்றன. நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறிய கறுப்பு நிற துகள்கள், புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் மற்றும் அதன் குளத்தைச் சூழ்ந்தது.கிராமத்தைச் சூழ்ந்த மாசு துகள்களை கிராமப் பெண்கள் கையில் ஏந்தி சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படாததால், சுற்றியுள்ள கிராம மக்கள் பல வகையான உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தினர், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு தீர்வு எட்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட சமையல் எண்ணெய் தொழிற்சாலைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலும் மேற்கூரை வழியாக புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE