ஊத்துக்கோட்டை; பெரியபாளையம் அருகே, ஆரணி ஆற்றில் கட்டப்பட்ட பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது.நகரியில், மலைக்குன்றுகளுக்கு இடையே உருவாகும் ஆரணி ஆறு, ஆந்திர மாநிலத்தில், 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, பிச்சாட்டூர், சுருட்டப்பள்ளி வழியே, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைக்கிறது.அங்கிருந்து, சிட்ரபாக்கம், பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தாக்குளம், பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகள் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து, பழவேற்காடு அருகே, புலிக்காட் எனும் இடத்தில், வங்கக் கடலில் கலக்கிறது.தமிழக பகுதிகளில், ஐந்து தடுப்பணை மற்றும் மூன்று அணைக்கட்டுகள் உள்ளன.பெரியபாளையம் அருகே, பாலேஸ்வரம் அணைக்கட்டு, 2009ல் கட்டப்பட்டது. 7.44 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில், நான்கு மதகுகள் உள்ளன.இதில், தேக்கி வைக்கப்படும் நீரால், செயற்கை செறிவூட்டல் காரணமாக, சுற்றியுள்ள, 5,000 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும்.ஐந்து ஆண்டுகளாக வறண்ட நிலையில் காணப்பட்ட இந்த அணைக்கட்டிற்கு, 'நிவர், புரெவி' புயல்களால் பெய்த மழை காரணமாக, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், நிறைந்து, தற்போது, உபரி நீர் வெளியேறி வருகிறது. அணைக்கட்டு முழுதும் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE