சிட்லபாக்கம் - திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக, மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்தை செலுத்த, போதிய பணம் இல்லை என, சிட்லபாக்கம் பேரூராட்சி அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.சென்னை புறநகரில் உள்ள சிட்லபாக்கம் ஏரியை ஒட்டி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், சிட்லபாக்கம் பேரூராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்ததுடன், அதற்காக, 45 லட்சம் ரூபாய் செலவில், 'இன்சினேட்டர்' இயந்திரமும் பொருத்தியது.கடந்த, 2016ம் ஆண்டு, திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி, குடியிருப்புகள், நீர்நிலைகளில் இருந்து, 700 அடி துாரம் இடைவெளிவிட்டு, இப்பணிகளை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி நிர்வாகம் இதை மீறி செயல்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாயின.இதன் அடிப்படையில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு கேள்வி எழுப்பியது.மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சிட்லபாக்கத்தில் ஆய்வு செய்ததில், பேரூராட்சி நிர்வாகம், ஏப்ரல் முதல் இம்மாதம் வரை, ஏரியை ஒட்டி தரம் பிரிக்காமல் குப்பையை கொட்டியதுடன், இன்சினேட்டர் இயந்திரத்தையும், அனுமதியின்றி, நான்கு நாட்கள் இயக்கியது தெரிந்தது.இதனால், அதிகாரிகள், 8 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதற்கு, பேரூராட்சிகளின் இயக்குனர், பழனிசாமி அறிக்கை கேட்டுள்ளார்.இது குறித்து, பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இயக்குனர் உத்தரவுப்படி, அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது; ஓரிரு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆனால், அபராதம் செலுத்துவதற்கான தொகை, நிர்வாகத்தின் கையிருப்பில் இல்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE