ஆத்தூர்: வீட்டுமனை இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, டி.எஸ்.பி., அலுவலகம் முன், தம்பதியர், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடி, கம்பன் தெருவை சேர்ந்த, கூலித்தொழிலாளி பாலமுருகன், 40. இவரது மனைவி தேன்மொழி, 35. இவர்கள், நேற்று மதியம், 1:00 மணிக்கு, ஆத்தூர் டி.எஸ்.பி.,அலுவலகம் சென்றனர். தொடர்ந்து, 'தங்கள் வீட்டுமனை இடத்தை அபகரித்துக்கொண்டு தரமறுக்கிறார்கள். இதுகுறித்து, ஆத்தூர் டவுன் போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை' எனக்கூறி, தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு, தம்பதி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார், தம்பதியை மீட்டபோது, காலில் விழுந்து கதறி அழுதனர். தொடர்ந்து, டி.எஸ்.பி., அலுவலகத்தில், தம்பதி அளித்த மனு: முல்லைவாடியில், எங்களுக்கு சொந்தமான, 812 சதுர அடி இடத்தின் மீது, காமராஜ் என்பவர் மூலம், பழனிசாமியிடம், ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். நான்கு ஆண்டுக்கு முன், கடன், வட்டியை செலுத்திவிட்டேன். ஆனால், பழனிசாமி, அவரது மனைவி கலைவாணி பெயரில், எங்கள் நிலத்தை கிரயம் செய்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, காமராஜ், பழனிசாமி ஆகியோர், எங்களை தாக்கியதோடு, நிலத்தை அபகரித்துக்கொண்டனர். இவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். போலீசார், அவர்களை, ஆத்தூர் டவுன் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பழனிசாமி கூறுகையில், ''பாலமுருகன் இடத்தை அபகரிக்கவோ, மோசடி செய்யவோ இல்லை. எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் யார் பெயரில் உள்ளது என்பதை பார்த்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE