'அப்பாவி விவசாயிகள், இளைஞர்களை, பொம்மைகளாக்க எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்; இந்த உண்மையை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்' என, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய வேளாண் சட்ட திருத்தத்துக்கு எதிராக, டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்த, விவசாயிகளின் மொபைல்போன் எண்ணுக்கு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதத்தின், தமிழாக்க 'லிங்க்' அனுப்பப்படுகிறது.
அந்த செய்தியில், அமைச்சர் தோமர் கூறியுள்ளதாவது:வேளாண் சட்டங்கள் குறித்து சில விவசாய அமைப்புகள் ஒரு மாயையை உருவாக்கியுள்ளன. புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின், குறைந்தபட்ச ஆதார விலைகளின் அடிப்படையில், அரசு செய்திருக்கும் கொள்முதல், எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையை அரசு ஒருபோதும் கைவிடாது. பொய்களை அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பயன்
நாட்டில், 80 சதவீத சிறு விவசாயிகள், ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலம் தான் வைத்திருக்கிறார்கள். அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் அளிப்பதால், நெருக்கடியான காலத்தில் கடன் பெறுவது தவிர்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்யாமல், விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவது சிரமம் என, வேளாண் நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த 2014ல், பா.ஜ., அரசு பதவியேற்றதும், வேளாண் சீர்திருத்தங்களை பற்றிய கலந்தாலோசனையை துவங்கினோம். 1.5 லட்சம் பயிற்சி முகாம் மற்றும் இணையவழி சந்திப்புகளில், விவசாயிகளிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு, புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
பொய் பிரசாரம்
வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு சந்தைகள் பலப்படுத்தப்படுகின்றன. வீட்டு வாசலிலேயே விளைபொருளை நல்ல விலைக்கு விற்பதற்கு, வெளிச்சந்தை விற்பனைக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர், விவசாயிகளின் நிலத்தை பிடுங்கிவிடுவார்கள் என்று பொய்யை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். விளைபொருளுக்கு மட்டும் தான் ஒப்பந்தம் போடப்படுகிறது என்ற நிலையில், விளைநிலம் எப்படி பறிபோகும்? நிலம் விவசாயிகளுக்கு தான் சொந்தம் என, புதிய சட்டம் தெளிவாக கூறுகிறது. விவசாயிகள் போர்வையில், சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் உருவாக்கியுள்ள குழப்பமான சூழ்நிலையை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் விவசாயிகள், இளைஞர்களே அவர்கள் இலக்கு. அப்பாவி விவசாயிகளை அரசியலில் பொம்மைகளாக்க முயற்சி செய்கின்றனர். புரளிகள் மீது கவனம் செலுத்தாமல், எல்லா விஷயங்களையும் உண்மைகளின் அடிப்படையில் சிந்தித்து மதிப்பிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


விவசாயிகளுக்கான வாக்குறுதிகள்!
*குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க, அரசு தயாராக உள்ளது.
*வேளாண் விளைபொருள் சந்தைக்குழுக்களுக்கு வெளியில் செயல்படும் தனியார் சந்தைக்கு வரி வசூலிக்க மாநிலங்கள் அனுமதிக்கப்படும்.
* எந்த சர்ச்சைகள் எழுந்தாலும் நீதிமன்றத்தை நாட விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
* வேளாண் ஒப்பந்தத்தை பதிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை அளிக்கப்படும்.
* யாரும் சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்த முடியாது. ஏனெனில், விவசாய நில பயன்பாட்டு உரிமையில் மாற்றம், விற்பனை, குத்தகைகள் மற்றும் அடமானம் வைக்கும் எந்த அம்சமும் இந்த சட்டத்தில் இல்லை.
*விவசாயிகளின் நிலத்தில் நிரந்தரமான எந்த மாற்றத்தையும் ஒப்பந்ததாரர்கள் செய்ய முடியாது. விவசாயிகள் நிலத்தில் தற்காலிக கட்டுமானம் எதுவும் மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு கடன் தரப்படாது.
*எந்த சூழ்நிலையிலும், விவசாயிகளின் நிலத்தை பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்காது. இவ்வாறு, கடிதத்தின் வாயிலாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE