சென்னை: கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாள்கள் நடைபெறும் விழாவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவிலின் ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன் தாக்கல் செய்த மனுவில், ‛வரும் டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் டிச.,27 முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த காரைக்கால் மாவட்ட கலெக்டரும், கோவில் செயல் அலுவலரும் முடிவெடுத்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோவிலுக்குள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்றும், நள தீர்த்ததில் நீராட அனுமதிப்பதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி நான், புதுச்சேரி அரசு, காரைக்கால் கலெக்டர், கோவில் செயல் அலுவலர், துணைநிலை கவர்னர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 27-ம் தேதி மனு கொடுத்தேன். மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்,' என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசனத்துக்காக ஒரு நாளைக்கு எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட கலெக்டர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை கவர்னர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை டிச.,24 நண்பகல் 12 மணிக்கு கூட்டி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கொரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE