புதுடில்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்., முன்னாள் தலைவர் ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள், பேரணியாக சென்றனர்.
பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பேரணியை தொடர்ந்ததால், பிரியங்கா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ராகுல் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அனுமதியளித்த நிலையில், அவர்கள் மட்டும் ஜனாதிபதியிடம் மனு அளித்தனர். இந்த விவகாரம் டுவிட்டரில் பல்வேறு ஹேஸ்டேக்குகளுடன் டிரெண்டானது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் 29 நாட்களாக டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளிலும், எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்றனர்.

இந்த கையெழுத்துடன் விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலையிட்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரும் மனுவையும் காங்கிரஸ் கட்சி தயாரித்து உள்ளது. இந்த மனுவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தலைமையில், பொதுச்செயலர் பிரியங்கா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், ஜனாதிபதி மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து பேரணியாக செல்ல திட்டமிட்டனர். ஆனால், பேரணி செல்வதற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. அதையும் மீறி பேரணி செல்ல முயன்றபோது, பிரியங்கா உள்ளிட்ட காங்.., தலைவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.அதேசமயம், ராகுல் உள்ளிட்ட 3 பேர் மட்டும் ஜனாதிபதி மாளிகை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் ஜனாதிபதியை சந்திக்க எம்.பி.,க்களுக்கு உரிமை உண்டு. அவர்களை அனுமதிக்க வேண்டும். எங்களை அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரப் போகிறது. லட்சக்கணக்கான விவசாயிகளின் குரல்களை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அரசுக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பும் இருந்தால், அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கிறார்கள்.

நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த பேரணியை நடத்துகிறோம். மத்திய அரசு அகங்காரத்துடன் செயல்படுகிறது. அவர்கள் வழியில்தான் அரசியல் செய்கிறார்களேத் தவிர, விவசாயிகள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் மரியாதை இல்லை. விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் தேசவிரோதிகள் என முத்திரையிடுவது பாவம். விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, அதை தீர்த்துவைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை,' எனக்கூறினார்.
இதற்கிடையே ராகுல் தலைமையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளி்ட்டோர் ஜனாதிபதியை சந்தித்து 2 கோடி கையொப்பங்களை அளித்து, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி கூற வேண்டும் என வலியுறுத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் காங்., நடத்திய இந்த பேரணி, டுவிட்டரில் டிரெண்டானது. விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ள காங்கிரசை வேண்டுமென்றே தடுத்து நிறுத்துவதாகவும், அரசியல் பழிவாங்கும் செயல் எனவும் சிலர் காங்.,க்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், பேரணி நடத்துவது போலும், விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது போலும் ஏமாற்றி அரசியல் உள்நோக்கத்துடன் காங்., செயல்படுவதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, #CongressMarchForFarmers, #Pappu, Rahul Gandhi, Rashtrapati Bhavan, President of India உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE