பெரம்பலுார்:திருமானுாரில் கூட்டரங்க மேடையில் இருந்த மூப்பனார் பெயரை திமுகவினர் மறைத்ததை அடுத்து த.மா.கா., ஆதரவாளர்கள் உதயநிதியை முற்றுகையிட்டனர்.
அரியலுார் அருகே,திருமானுார் பஸ் ஸ்டாண்ட் அருகே மூப்பனாரின் பார்லிமெண்ட் நிதியில் கட்டப்பட்டிருந்த அரங்க மேடையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அரங்கமேடை ஒன்றியக்குழு தலைவர் நிதியிலிருந்து சுண்ணாம்பு பூசப்பட்டது. இதனால், அரங்க மேடையில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த மூப்பனார் பெயர் தற்போது அழிந்தது என கூறப்படுகிறது.
இதனை கண்ட த.மா.கா.,வினர் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில், அரியலுாரில் பிரச்சாரம் தொடங்கிய உதயநிதி மதியம் 2 மணியளவில் திருமானுாருக்கு வருகை புரிந்தார். அப்போது, திருச்சி சாலையில் அவரது வாகனத்தை மறித்த த.மா.கா., மாணவரணி மாநிலத் துணைத் தலைவர் மனோஜ் மற்றும் த.மா.கா.,வைச் சேர்ந்த ஜோதிமணி உள்ளிட்ட நான்கு பேர் உதயநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை அப்பறபடுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத தி.மு.க.,வினர் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து நின்றனர். இந்நிலையில், அரங்கமேடை சீரமைப்பு பணி ஒன்றியக்குழு தலைவர் நிதியில் நடைபெற்று வருவதாகவும், பணி முடிந்த பிறகு பெயர் எழுதப்படும் எனவும், இதற்கும் தி.மு.க.,வுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE