பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: 'ஆன்லைன்' செயலிகள் மூலம் செயல்படும் கந்து வட்டி நிறுவனங்கள், இளைஞர்களின் உயிரை பறிக்கின்றன. வலுக்கட்டாயமாக கடன்களை வழங்கி விட்டு, திருப்பித் தர, கெடுபிடி செய்கின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும்.
'டவுட்' தனபாலு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும், பொதுநல அமைப்புகளும், ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் கடன்களை போதிய அளவில் வழங்காததால் தான், இது போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம், அப்பாவிகளுக்கு வலை விரிக்கப்படுகிறதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனவே, அந்த செயலிகளை தடை செய்வதை விட்டு, பொதுமக்களுக்கான கடன்கள், வங்கிகளில் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.!
பத்திரிகை செய்தி: 'நடிகர் கமலுக்காக செய்யப்பட்டுள்ள விளம்பரங்களில், 'வாழும் காமராஜர் கமல்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, திருமணம் செய்து கொள்ளாமல், ஒன்பது ஆண்டுகள் சிறை சென்றவர், காமராஜர். தமிழகத்தில், பொற்கால ஆட்சி புரிந்தவர். அவரை, கமலுடன் ஒப்பிட்டு களங்கப்படுத்தி உள்ளனர். இதை கமல் ரசிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி, சென்னை, போரூரைச் சேர்ந்தவர் முத்து ரமேஷ் என்ற நாடார் சங்க நிர்வாகி, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
'டவுட்' தனபாலு: எம்.ஜி.ஆர்., காமராஜருக்கு, இந்த தேர்தலில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதோ என்ற, 'டவுட்'டை, இந்த விளம்பரங்களால் ஏற்பட்டுள்ளது. எல்லாரும் இந்த இருவர் ஆட்சியை கொண்டு வருவோம் என்கின்றனரே தவிர, கருணாநிதி ஆட்சி, ஜெ., ஆட்சியை கொண்டு வருவோம் என பெருமையாக சொல்வதில்லையே ஏன்; அந்த அளவுக்கு அவர்கள் இருவர் ஆட்சி அலங்கோலமாக இருந்ததோ என்ற, 'டவுட்டும்' நடுநிலையாளர்களுக்கு வருகிறது!
தமிழக காங்., தலைவர் அழகிரி: காங்கிரசின், 136வது ஆண்டு நிறுவன நாள் விழா, நாடு முழுதும் வரும், 28ல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட வாரியாக, காந்தி சிலை அருகில், கட்சி கொடி ஏற்ற வேண்டும். கொடிகளை, 136 பேர் கைகளில் ஏந்தி, தலையில் காந்தி குல்லா அணிந்து, ஊர்வலமாகச் சென்று, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், கொடி ஊர்வலம் நடத்த வேண்டும்.
'டவுட்' தனபாலு: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் தானே, இந்த, 136வது நிறுவன நாளை, காங்.,கொண்டாட உள்ளது... இதன் மூலம், 'மாஸ்' காண்பித்து, தி.மு.க., கூட்டணியில் கூடுதல் இடங்களை பெற, பேரம் பேசப் போகிறீர்களோ என்பது தான், உங்கள் கட்சியின் சாதாரண தொண்டர்களுக்கு வந்துள்ள, 'டவுட்!' எனினும், காந்தி குல்லாவை கடாசி, பல ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் எடுத்து வர நினைவூட்டுகிறீர்கள்; சற்று கஷ்டம் தான்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE