கட்சியில் 'திராவிடம்' வேண்டாம்!
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: 75 ஆண்டுகளுக்கும் மேலாக, 'திராவிடக் கொள்கை' என்ற பெயரில், தமிழக மக்களை திசை திருப்பி வந்த கட்சிகளை, புறக்கணிக்கும் காலம் வந்து விட்டது.இந்தியாவில் உள்ள தென் மாநிலங்களைச் சேர்ந்தோர், திராவிடர் என, அடையாளப்படுத்துகின்றனர். தமிழகத்தைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில், 'திராவிடம்' என்ற வார்த்தை உச்சரிக்கப்படுகிறதா?அம்மாநிலங்களைச் சேர்ந்தோர், 'தமிழ் தான், எங்கள் ஆதி மொழி' என, பெருமை பொங்க கூறுகின்றனரா?தமிழகத்தில் மட்டும் தான், 'திராவிடம்' என்ற பெயரை சொல்லி ஏமாற்றி வருகின்றனர்.நம்மை அடிமையாக்கி கொடுமைப்படுத்திய ஆங்கிலேயருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர், ஈ.வெ.ரா.,
என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட, ஈ.வெ.ரா.,வின் கொள்கை தான், திராவிடம் என்பது.இந்த போலித்தனமான திராவிடக் கொள்கையால், தமிழகம் சீரழிந்தது. மாற்றத்திற்கான அறிகுறி தென்பட துவங்கி விட்டது.ஜாதி, மதத்தால் பிரிவினை பேசுவோரின் பம்மாத்து வேலையெல்லாம், இனி எடுபடாது.பகுத்தறிவு பேசி, தேவாலயத்தில், 'கேக்' வெட்டியும்; மசூதியில் கஞ்சி குடித்தும், மக்களை ஏமாற்றி விடலாம் என்ற கனவு, இனி பலிக்காது.
எனவே, புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நபர்கள், தயவு செய்து, திராவிடக் கொள்கையை பின்பற்றாதீர். என்ன பெயரில் வேண்டுமானாலும், கட்சியை துவங்குங்கள்; ஆனால் அதில், 'திராவிடம்' என்ற வார்த்தை மட்டும் வேண்டாம்.
கற்பனை சிலை எதற்கு?
எஸ்.ஏ.அமீர் அலி, சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்: அரசியல் தலைவர்களுக்கு ஏகப்பட்ட செலவு செய்து, சிலை அமைப்பதால் ஏதேனும் பயன் உண்டா? பறவை எச்சம் கழிக்க மட்டும் தான், அவை வசதியாக உள்ளன.சிலை மற்றும் நினைவு மணிமண்டபம் அமைப்பதால், மக்கள் வரிப் பணம் தான் செலவாகிறது.சிலைக்கு மாலை அணிவிக்கும்போது, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. சமூக விரோதிகள், அந்த சிலைக்கு செருப்பு மாலை போட்டால், கலவரம் வெடிக்கிறது.இந்த சிலையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை; அதே நேரம், மக்களுக்கு தொல்லையாகவே இருக்கிறது.தமிழகத்தில், சிலைகளுக்கு பஞ்சமே இல்லை. திருவள்ளுவரின் உருவம் எப்படி இருந்தது என, யாருக்கும் தெரியாது. வேணுகோபால் சர்மா என்பவர், கற்பனையில் வரைந்த படத்தை தான், நாம் வள்ளுவர் என, கொண்டாடி வருகிறோம்; அந்த திருவள்ளுவருக்கும், 133 அடியில் சிலை அமைத்துள்ளோம்.
ஆத்திச்சூடியை இயற்றிய அவ்வையாருக்கும், அவ்வாறே கற்பனையான சிலை தான். தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கப் போவதாக, அரசு அறிவித்துள்ளது.கற்பனைக்கு உருவம் கொடுத்து சிலை அமைப்பது, பகுத்தறிவுக்கு எதிரானது. எனவே சிலை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
வேளாண் சட்டத்தை சோதிக்கலாமே!
சிவ.தொல்காப்பியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விவசாயிகளின் நிலை, காலம் காலமாக துயரத்தில் தான் இருக்கிறது. இடுபொருட்கள் விலை, கூலி என, அனைத்தும் ஆண்டுதோறும் உயர்ந்துள்ளன.விவசாயத்தில் இருந்து எண்ணற்றோர் விலகி சென்று, பிற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்; நஷ்டம் காரணமாக, விவசாயிகள் பலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.இன்றைய நிலையில் விவசாயத்தில் முதலாளியாக இருப்பதை விட, கூலி தொழிலாளியாக இருப்பது, லாபகரமானது.இந்நிலையில், புதிய வேளாண் சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்த முன்வந்துள்ளது. அதில், விவசாயிகளுக்கான பாதுகாப்பு வளையம் உள்ளது. அதாவது, குறைந்தப்பட்ச ஆதார விலை, அரசு கொள்முதல், பழைய முறையில் விற்பனை என, அனைத்தும் உள்ளன.வேளாண் சட்டத்தின்படி, விவசாயம் மேற்கொள்ள தயங்குவோரை விட்டுவிடலாம். அதில் ஆர்வம் உள்ளோரை பயன்படுத்தி, வேளாண் சட்டத்தை சோதனை முறையில் செயல்படுத்தி பார்க்கலாமே!தேவைக்கு மேல், விளைச்சல் உள்ளபோது, அந்த பொருளை யார் வாங்கி, என்ன செய்தால் நமக்கென்ன?அந்த காலத்தில் நாம், ஓர் ஆண்டிற்கான அரிசியை, வீட்டில் இருப்பு வைத்திருந்தோம் என்பதை, மறந்து விடாதீர்.இப்போது சிலர், 'விளைபொருட்களை, 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கி, இருப்பில் வைத்து, அப்புறம் அதிக விலைக்கு விற்கும்' எனச் சொல்கின்றனர்.உற்பத்தி இருக்கும் வரை, பொருட்களின் விலை உயராது. மேலும், அத்திய வசிய பொருட்கள் சட்டத்தின்படி, பற்றாக்குறை நிலவும் நேரத்தில், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.முக்கியமாக, விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.எனவே, வேளாண் சட்டத்தை சோதனை முறையிலாவது செயல்படுத்த, எதிர்க்கட்சிகள் அனுமதிக்கலாமே!
உங்கள் முதுகை பாருங்கள்!
எப்.என்.குப்புசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்: 'அரசியல் என்பது, மக்களுக்கான அரசியலாக இருக்க வேண்டும். ஆன்மிகத்துக்கான, ஜாதிக்கான, மதத்துக்கான அரசியலாக இருப்பதில் நியாயமில்லை' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தங்கையும், அக்கட்சியின் மகளிரணி செயலருமான கனிமொழி கூறியுள்ளார்.அவரை பொறுத்தவரையில், குடும்ப அரசியலாக இருப்பதே சிறந்தது போலும்!நடிகர் ரஜினி, 'உண்மையான, நேர்மையான, துாய்மையான அரசியலே, ஆன்மிக அரசியல்' என, தெளிவாக கூறியுள்ளார்.'ஜாதி, மதத்திற்கான அரசியல் நியாயமில்லை. அவை, மக்களை பிளவுபடுத்தக் கூடிய விஷயமாகவே இருக்கும்' என்றும், கனிமொழி கூறுகிறார்.தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன், வேல்முருகன், ஈஸ்வரன் போன்ற ஜாதிக்கட்சி தலைவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற மதம் சார்ந்த கட்சியும் உள்ளன.
அந்த ஜாதி, மத கட்சிகளை, கூட்டணியில் இருந்து, தி.மு.க., விலக்க போகிறதா என்ன?கனிமொழி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது. கட்சியின் முன்னணி தலைவர்கள், தங்கள் நிலை குறித்து உணர்ந்து, பிறரை விமர்சிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE