சாந்தினிகேதன் :''தற்சார்புடன் நம் நாடு விளங்குவதற்கான முயற்சிகளுக்கு, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் எண்ணங்கள், தொலைநோக்கு பார்வைகள் வித்திட்டன,'' என, பிரதமர் நரேந்திர மோடி, பெருமையுடன் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. விரைவில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ., மற்றும் ஆளும் திரிணமுல் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.இந்த சூழ்நிலை யில், நோபல் பரிசு பெற்ற, கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கிய, விஸ்வபாரதி பல்கலையின் நுாற்றாண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. நாட்டின் மிகவும் பழமையான, மத்திய பல்கலையாக இது விளங்குகிறது.
டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பிரதமர் மோடி பேசியதாவது:இது போன்ற பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், தேசிய உணர்வுகளை மட்டும் ஊட்டவில்லை; சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகின்றன. சுதந்திரப் போராட்டத்தின்போது, தேசிய உணர்வுடன், இந்தியாவை மறுசீரமைக்கக் கூடிய இளைஞர்களை உருவாக்கும் வகையில், இந்த கல்வி நிறுவனத்தை தாகூர் துவக்கினார்.அவரது அந்த தொலைநோக்கு பார்வை தான், தற்சார்பு என்ற நம் தற்போதைய முயற்சிகளுக்கு அடிப்படையாக அமைந்து உள்ளது.
சுயசார்பு இந்தியா என்பதன் நோக்கமே, இந்தியா வளர்ச்சி பெற வேண்டும்; அதன் வாயிலாக உலகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே. அதை உணர்த்தும் வகையில் தான், இந்த பல்கலையின் பெயரும் உள்ளது.
தற்போது பல விஷயங்களில், உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக உள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, பருவநிலை மாறுபாடு பிரச்னையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
சிறந்த மனிதர்களை உருவாக்க வேண்டும் என்ற பரிசோதனையில், தாகூரால் உருவாக்கப்பட்டது, விஸ்வபாரதி பல்கலை. அவரது எண்ணங்கள், கொள்கைகள், தொலைநோக்கு பார்வையை பாதுகாத்து, அவற்றை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE