புதுடில்லி:நாடு முழுதும் உள்ள அனல் மின் நிலையங்களில், பாதுகாப்பு தணிக்கையை மேற்கொள்ள, மத்திய அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள, என்.எல்.சி., எனப்படும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் அனல் மின் நிலையத்தில், ஜூலை, 1ம் தேதி, கொதிகலன் வெடித்து சிதறியது. அதில், 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் பிரதிநிதிகள், கடலுார் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.
அந்த குழு ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் அடங்கிய அமர்வு முன் சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அவசர நிலையை கையாள தெரியவில்லை. செயல்முறை குறித்து அவர்களுக்கு முறையாக தெரியவில்லை. அவர்களின் அறியாமை காரணமாகவே, அந்த விபத்து ஏற்பட்டது.
அந்த ஊழியர்களுக்கு, நிலைமையை கையாள, உரிய பயிற்சிகள் வழங்கப்படவில்லை. தொழிற்சாலைகள் மற்றும் ரசாயனங்கள் சட்டங்களின் கீழ், ஆலை பாதுகாப்பு, ரசாயன உற்பத்தி, சேமிப்பு உள்ளிட்டவற்றில், அங்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த ஆய்வு அறிக்கையை வைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம், நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுதும் உள்ள இது போன்ற அனல்மின் நிலையங் களில், பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய மின் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் செயலர்கள், இதர துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து, இந்த பணிகளில் ஈடுபட வேண்டும். இந்த தணிக்கை பணிகள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE