'கொரோனா தொற்று பாதிப்பு இல்லை' என, உறுதியான நிலையில், நடிகர் ரஜினி, விரைவில் சென்னை திரும்ப உள்ளதால், அவரது கட்சி விவகாரம் சுறுசுறுப்படைந்து உள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தில், பூத் கமிட்டி செயல்பாடு குறித்த விபரங்களை உடனே தலைமைக்கு தெரிவிக்கும்படி, நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ரஜினி நடிக்கும், 'அண்ணாத்த' படப்பிடிப்பு, ஐதராபாதில் நடந்து வருகிறது. படப்பிடிப்பை, வரும், 28ம் தேதி முடித்து விட்டு, 29ம் தேதி சென்னை திரும்பவும், 31ம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடவும், ரஜினி திட்டமிட்டிருந்தார்.
ஆனால், 'அண்ணாத்த' படக்குழுவில் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதில், ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனாலும், அவர் ஐதராபாதிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அவருடன் நடித்த நயன்தாரா நேற்றே சென்னை திரும்பியுள்ள நிலையில், ரஜினி விரைவில் சென்னை திரும்ப உள்ளார். இதனால், அவரது கட்சி விவகாரம் சுறுசுறுப்படைந்து உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் தொகுதி வாரியாக உள்ள, அந்தந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் குறித்த விபரங்களை, நாளை மாலை, 3:00 மணிக்குள், மின்னஞ்சலில் அனுப்புமாறு, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, ரஜினி மக்கள் மன்ற மூத்த நிர்வாகி உத்தரவிட்டுள்ளார்.
ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும் அதே நேரத்தில், கட்சியின் அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகள், பொறுப்பாளர்களையும் நியமித்து, கட்சி பணிகளை தீவிரப்படுத்துவார் என, அவரது மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர்--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE