தீய சக்திகள் திட்டம் பலிக்காது: அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தீய சக்திகள் திட்டம் பலிக்காது: அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி

Added : டிச 24, 2020
Share
சென்னை:'தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்ட சபை பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம்' என, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், அ.தி.மு.க., சார்பில், உறுதி மொழி எடுக்கப்பட்டது.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், காலை, 10:00

சென்னை:'தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்ட சபை பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம்' என, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், அ.தி.மு.க., சார்பில், உறுதி மொழி எடுக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், காலை, 10:00 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், மலர் வளையம் வைத்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

பின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், உறுதிமொழிகளை வாசிக்க, மற்றவர்கள், அதை தொடர்ந்து கூறினர். உறுதிமொழி விபரம்: அ.தி.மு.க.,வை தந்த, எம்.ஜி.ஆர்., புகழை எந்நாளும் காப்போம். அவரது நினைவுகளை இதயத்தில் வைத்து, கட்சி பணியாற்றுவோம் எம்.ஜி.ஆர்., வழி நடப்போம்.

கட்சியை இமயம் போல் உயர்த்திடுவோம். உண்மையான ஜனநாயகம் காப்போம். அவர் காட்டிய புரட்சி வழியை தொடர்வோம். மக்களுக்கு தொண்டாற்றுவோம்

* எம்.ஜி.ஆர்., திட்டங்கள் தொடர வேண்டும். அதை நிறைவேற்ற, ஜெ., ஆட்சி தொடர வேண்டும். அதற்காக உழைப்போம். தமிழக மக்களை காக்க, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதற்காக நம்மை அர்ப்பணிப்போம்

* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிகழ்த்திய சாதனைகளை, நாமும் தொடர்ந்து செய்வோம். எதிரிகள் எவர் வந்தாலும், அந்த தீய சக்திகளின் திட்டங்கள் பலிக்காது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு, மக்கள் மகுடம் சூட்டினர். அந்த புகழ் மகுடத்தை, எதிரிகள் எவரும் தட்டி பறிக்க விட மாட்டோம்
* ஜெ., ஆட்சி மீண்டும் மலர, ஒற்றுமையுடன் பாடுபடுவோம். 2021 சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம். இவ்வாறு, உறுதிமொழி ஏற்றனர்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் மற்றும் பொதுமக்கள், எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், மலர் அஞ்சலி செலுத்தினர். தமிழகம் முழுதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


பொதுமக்கள் அவதி

எம்.ஜி.ஆர்., நினைவிடத்திற்கு, அ.தி.மு.க.,வினர் ஏராளமான வாகனங்களில் வந்திருந்தனர். வாகனங்கள் அனைத்தும், சிவானந்தா சாலையிலும், காமராஜர் சாலையிலும் நிறுத்தப் பட்டிருந்தன.

கடற்கரை சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை போன்றவற்றில், வாகனங்கள் எதையும், போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தலைமைச் செயலகம், எழிலகம் வளாகங்களில் உள்ள, அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர், நடந்தே அலுவலகம் சென்றனர்.போலீசாரின் கெடுபிடியால் பாதிக்கப்பட்ட, அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள், அவர்களை திட்டியபடி சென்றனர்.

இதைக் கண்ட அ.தி.மு.க.,வினர், அங்கிருந்த போலீசாரிடம், 'உங்களாலே, அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது' என கூற, 'மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின்படி செயல்படுகிறோம்' என, பதில் அளித்தனர்.அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., சார்பில், ஏராளமானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களில், பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X