வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற, பிரியங்கா உள்ளிட்ட காங்., பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். ராகுல் உள்ளிட்ட மூவருக்கு மட்டுமே, ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க, அனுமதி அளிக்கப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள், டில்லியில் போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.பி.,க்களும், ஜனாதிபதி மாளிகை நோக்கி, பேரணியாக செல்ல திட்டமிட்டனர்.இதற்காக, நேற்று காலை, அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், அக்கட்சி எம்.பி.,க்கள், நிர்வாகிகள் என பலரும் குவிந்தனர். அருகில் உள்ள விஜய்சவுக் சென்று, அங்கிருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி, பேரணியாகச் செல்ல திட்டமிடப்பட்டது.
தள்ளுமுள்ளு
பேரணியின் முடிவில், விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுதும் பெறப்பட்ட, இரண்டு கோடி கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் அளிப்பது என, கிளம்பினர்.ஆனால், அந்த பகுதி முழுதும், திடீரனெ, 144 தடையுத்தரவு போடப்படவே, சூழ்நிலை பரபரப்பானது. தடையை மீறி, ராகுல் தலைமையில், பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது, போலீசாருடன் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் சிலர், கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப் பட்டனர்.
அப்போது, நிருபர்களிடம், பிரியங்கா கூறியதாவது:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி.,க்களுக்கு, இந்த நாட்டின் ஜனாதிபதியை சந்திக்க உரிமை இல்லையா... விவசாயிகளை பல்வேறு பெயர்களை வைத்து கேலி பேசுவதன் மூலம், இந்த அரசாங்கமும், பா.ஜ.,வினரும், அவர்களை கொச்சைப் படுத்துகின்றனர்.பா.ஜ., சில சமயங்களில், 'காங்கிரஸ், மிகவும் பலவீனமான கட்சி' என்கிறது. தற்போது, 'போராட்டக்களத்தில் விவசாயிகள் குவிய காங்கிரசே காரணம்' என்கிறது. அப்படியானால், காங்கிரஸ் பலமானதா அல்லது பலவீனமானதா என்பதை, பா.ஜ., முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, அவர், கூறினார்.
மூன்று பேர்
இதன்பின், முக்கிய தலைவர்கள் பலரும், ஜனாதிபதி மாளிகையை நோக்கி சென்றாலும், 'மூன்று பேர் மட்டுமே, உள்ளே செல்ல அனுமதிக்க முடியும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் மட்டும் சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இரண்டு கோடி கையெழுத்துகள் அடங்கிய மனுவை அளித்தனர். 'இந்த பிரச்னையில் தலையிட வேண்டும். பார்லிமென்டை உடனடியாக கூட்ட வேண்டும்' என, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
திறமையற்றவர்
சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது;பிரதமராக உள்ள நரேந்திர மோடி, திறமையற்றவர். அவருக்கு எதுவும் தெரியாது. சில பெரு முதலாளிகள் பேசுவதைத்தான், அவரால் கேட்க முடியும். அவர்கள் எதைச் சொன்னாலும், அதன்படியே நடப்பவர் தான், நம் பிரதமர். அந்த நான்கைந்து பேருக்கு லாபம் தரக்கூடியதை மட்டுமே செய்வார்.நாட்டில் ஜனநாயகம் கிடையாது. ஜனநாயகம் இருப்பதாக யாராவது நம்பினால், அது நிச்சயம், அவர்களது கற்பனையாகத்தான் இருக்க முடியும்.அரசுக்கு எதிராக, யார் நின்றாலும், அந்த நபர், விவசாயியாகவோ அல்லது தொழிலாளராகவோ, அவ்வளவு ஏன், மோகன் பாகவத்தாகவே இருந்தாலும்கூட, உடனடியாக, அவரை பயங்கரவாதி என, முத்திரை குத்த, தயங்குவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE