சென்னை:ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழு, தன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜுவிடம், சமர்ப்பித்தது.
தமிழகத்தில், கூட்டுறவு துறை சார்பில், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் பணிபுரியும் விற்பனையாளர், எடையாளருக்கு, தற்போது, நடைமுறையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம், நவம்பரில் முடிந்தது.புதிய ஊதியம் நிர்ணயம் குறித்து பரிசீலிக்க, மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. அக்குழு, ரேஷன் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினருடன், நவ., துவக்கத்தில் பேச்சு நடத்தியது.
இந்நிலையில், அக்குழுவின் தலைவர் சக்தி சரவணன், தன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, சென்னை, தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் ஆகியோரிடம், நேற்று சமர்ப்பித்தார்.
இதையடுத்து, ரேஷன் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'50 காசு தான் ஊக்கமா?'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக கார்டுக்கு, 50 காசு ஊக்கத் தொகைக்கு பதில், 5 ரூபாய் வழங்குமாறு, ரேஷன் ஊழியர்கள், அரசுக்கு, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன் ஊழியர்களுக்கு, கார்டுக்கு, 50 காசு ஊக்கத்தொகை வழங்குமாறு, மாவட்ட இணை பதிவாளர்களை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.வரும் பொங்கலுக்கு, ஒரு கார்டுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அந்த பணத்தை சரியாக எண்ணி கொடுப்பது, பொங்கல் பொருட்களை எடையிட்டு வழங்குவது மிகவும் சிரமமான வேலை.
பெரும்பாலான கடைகளில், 1,500க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். அவற்றில், தலா, ஒரே ஒரு ஊழியர் மட்டுமே உள்ளனர். கூடுதல் ஊழியரை நியமிக்குமாறு, உணவு துறை உத்தரவிட்டும், அதை, கூட்டுறவு அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, கார்டுக்கு, 5 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE