சென்னை:ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் போன்று, பொது சேவை மையங்கள் வாயிலாகவும், பத்திரங்களை தாக்கல் செய்யலாம். இதற்காக, சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில், 'ஆன்லைன்' முறையில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் திட்டம், அமலில் உள்ளது. இதில், பொது மக்கள் நேரடியாகவும், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் வாயிலாகவும், பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.இந்த வசதி வந்ததால், பத்திரப்பதிவு பணிகள் விரைந்து முடிக்கப்படுகின்றன.
பதிவு முடிந்த சில மணி நேரங்களில், மக்களுக்கு பத்திரம் கிடைத்து விடுகிறது. இதில் காணப்படும் சில தொழில்நுட்ப பிரச்னைகளை தீர்க்க, பதிவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்ய, ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களை மட்டுமே நம்பி இருக்கும் நிலை உள்ளது.அதனால், பத்திரங்களை தாக்கல் செய்ய, கூடுதல் வசதியாக, பொது சேவை மையங்களை ஈடுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வாயிலாக, ௫0 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் வாயிலாக, வில்லங்க சான்று, சான்றொப்பமிட்ட ஆவண நகல், ஹிந்து திருமண சான்று நகல் பெறுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.கடந்த, 2011ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், பத்திரங்களை தயாரித்து கொடுப்பது தொடர்பான சேவைகளையும், இம்மையங்கள் மேற்கொள்ள முடியும்.
பத்திரப்பதிவு இணையதளத்தில் இதற்கான, 'லாக் இன்' வசதியை ஏற்படுத்தினால், பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.பதிவுத்துறை நிர்வாகம், இதற்கான வசதியை விரைவில் ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கிறோம். இது, கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE