ராமேஸ்வரம் : -பாம்பன் குந்துகாலில் மீன் பதப்படுத்தும் அறை பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் உள்ளதால், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்களை பாதுகாக்க தமிழக அரசு பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடியில் படகுகள் நிறுத்தும் துறைமுகம் அமைத்து, செப்.,19ல் முதல்வர் திறந்தார்.இங்கு 200க்கும் மேலான படகுகள் நிறுத்தவும், ஆழ்கடல் படகில் சிக்கும் சூரை (டியூனா), சீலா உள்ளிட்ட உயர் ரகமீன்களை பதப்படுத்திட பதப்படுத்தும் அறை உள்ளது.ஆனால் இங்கு துாண்டில் வளைவு பாலம் இல்லாததால் சூறை காற்றுக்கு படகுகள் சேதமடையும் அபாயம் உள்ளதால், இங்கு ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளை நிறுத்த முன்வரவில்லை. இதனால் இத்துறைமுகம் அமைத்த நோக்கம் வீணாகி போகும் அபாயம் உள்ளது.
முதல்வர் திறந்து வைத்து 3 மாதம் ஆகியும், மீன்பதப்படுத்தும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால் சில ஆழ்கடல் படகுகள் சிக்கிய சூரை, சீலா, வாவல் உள்ளிட்ட வெளிநாடு ஏற்றுமதியாகும் சில மீன்களை, இங்கு பதப்படுத்த முடியாமல் உடனடியாக குறைந்த விலைக்கு மீன்களை விற்பதால், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.எனவே மீன் பதப்படுத்தும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மீன்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE