சென்னை:''உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப, கொரோனா வைரசின் மரபணு மாறுபடும் தன்மை உடையது,'' என, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறினார்.
நம்நாட்டில், தலைநகர் டில்லியில், இரண்டாம் கட்ட தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மூன்றாம் கட்ட தொற்றுக்கு நகர்ந்து வருகிறது. தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த போது, அலோபதி மற்றும் இந்திய மருத்துவம் என, ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையால், மாநில அரசு கட்டுப்படுத்தி உள்ளது. தற்போது, பிரிட்டனின் புதிய ரக தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் பணிகளில், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநிலம் முழுதும், 90 சதவீதம் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி சுற்றித் திரிகின்றனர். சென்னை போன்ற நகரங்களிலும், இதே நிலை தான் நீடிக்கிறது. எனவே, இரண்டாம் கட்ட தொற்று மற்றும் பிரிட்டனின் புதிய ரக தொற்று, பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: கொரோனா வைரசை பொறுத்தவரை, உடலுக்கு உடல், நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப, மரபணு மாறுபடும் தன்மையுடையது. மாறுபாடு அடைந்த வைரஸ், பிரிட்டன் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அவை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனாலும், பொதுமக்கள், முகக்கவசம் அணியாலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும் உள்ளனர்.
இந்த நிலை நீடித்தால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும். அவற்றை சமாளிக்க கூடிய கட்டமைப்பு தமிழக அரசிடம் உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனாவை முழுமையாக தடுப்பது பொதுமக்களிடம் தான் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE