ஸ்ரீபெரும்புதுார்:'டிவி' நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது உதவியாளரிடம், நேற்று விசாரணையை முடித்த, ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ, விசாரணை அறிக்கையை, விரைவில் சமர்ப்பிக்க உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த, 'டிவி' நடிகை சித்ரா, 29. இம்மாதம், 9ம் தேதி, பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில், துாக்கிட்டு தற்கொலை செய்தார்.நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, உடன் தங்கியிருந்த, அவரின் கணவர் ஹேம்நாத்தை, 32, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.சித்ரா தற்கொலை தொடர்பாக, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, 14ம் தேதி, சித்ரா குடும்பத்தினரிடம் விசாரணையை துவங்கினார்.
பின், கணவர் ஹேம்நாத், மாமியார், மாமனார் மற்றும் சித்ராவின் நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீட்டினர், சக நடிகையர், சித்ரா தற்கொலை செய்த ஓட்டல் ஊழியர் என, 14 பேரிடம், விசாரணை மேற்கொண்டார்.இந்நிலையில், சித்ராவின் உதவியாளர் ஆனந்திடம், நேற்று, ஒரு மணி நேரம் விசாரித்தார். அத்துடன், வழக்கு விசாரணை நிறைவு அடைந்தது.
விசாரணையில் ஆஜரானவர்கள் கூறிய வாக்குமூலம்அடிப்படையில், எழுத்து பூர்வ அறிக்கை தயார் செய்து, பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுதர்சனிடம், ஆர்.டி.ஓ., வழங்க உள்ளார். இந்த அறிக்கைக்கு பின்னரே, சித்ரா தற்கொலைக்கு, வரதட்சணை கொடுமையா அல்லது வேறு பிரச்னை காரணமா என்பது தெரியவரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE