ஆனைமலை;ஆனைமலை ஒன்றியம் முழுவதிலும், பிரிட்டன், துபாய் உட்பட பல நாடுகளில் இருந்து வந்தவர்களை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.உலகம் முழுவதிலும் கடந்த, 11 மாதங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரிட்டனில் உருவெடுத்துள்ள புதிய வகை கொரோனா வைரசால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களால், மக்கள் பீதியில் உள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள் குறித்த தகவல்களை, சுகாதாரத்துறையினர் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வெளிநாடு சென்று வந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர். ஆனைமலை ஒன்றித்திலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்டறிந்து வருகின்றனர்.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:நவ., 25 முதல் பிரிட்டன், லண்டனில் இருந்து இதுவரை, சென்னை, கோவை, கொச்சி விமான நிலையங்கள் வழியாக, இந்தியா வந்தவர்களின் தகவல்களை, விமான நிலையங்கள் கோவை மாவட்டத்துக்கு அனுப்பி வருகிறது.மேலும், பிரிட்டனில் இருந்து துபாய் உட்பட பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து, இந்தியா வந்தவர்களின் தகவல்களும் அனுப்பப்படுகிறது.இதை அடிப்படையாகக்கொண்டு, விசாரித்து வருகிறோம். ஆனால், இதுவரை ஒருவர் கூட பிரிட்டன் சென்று, ஒன்றிய பகுதிகளுக்கு வரவில்லை. பாதுகாப்பு கருதி எந்த நாட்டில் இருந்து வந்தாலும், அவர்களையும், குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி, தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE