உடுமலை:உடுமலையில் வணிக வளாகப்பகுதிகளில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகரில், பசுபதி வீதி, சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. அங்கு அத்தியாவசிய பொருட்கள், ஆடை உட்பட பல்வேறு வணிக பொருட்கள் விற்பனை நடக்கிறது.இந்த பகுதிகள், நகரின் மையப்பகுதியில் இருப்பதால், பிரதானமான வழித்தடமாகவும் உள்ளன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.இங்கு, வணிக கடைகள் வைத்திருப்போர் பலரும், ரோட்டை ஆக்கிரமிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு ரோட்டோரத்தில் விடப்பட்டுள்ள இடைவெளியை, பல வணிகக்கடைகளில், பொருட்களை வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் ரோட்டை மறித்து வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். பசுபதி வீதியில், இன்னும் கூடுதலாக, ரோடு வரை பொருட்களை அடுக்கி, ஆக்கிரமிக்கப்படுகிறது.சரக்கு வாகனங்கள் அல்லது கார் போன்ற வாகனங்கள் எதிரெதிரே வரும் போது, ஒதுங்கிச் செல்ல வழியில்லாமல், நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களும், அவ்வழியாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.இப்பிரச்னையால் வாகன ஓட்டிகளும் வரைமுறை இல்லாமல், வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் இதுகுறித்து, இந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும்.பொருட்களை வைத்தும், வாகனங்களை நிறுத்தியும் ரோட்டை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE