சென்னை:''தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்'' என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:பிரிட்டனில் இருந்து வந்த 2724 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக 926 பேர் தொடர்பு கொண்டனர்; அவர்களில் 511 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.பிரிட்டன் சரக்கு விமானத்தில் ஒன்பது பயணியர் வந்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசியுள்ளோம்.
நவ. 25ல் இருந்து டிச. 23 வரை வெளிநாடுகளில் இருந்து வந்த 38 ஆயிரம் பேரின் விபரங்களையும் சேகரித்து உள்ளோம். அவர்கள் அனைவரும் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.மேலும் பிரிட்டன் நாட்டை போல் தென் ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வருபவர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகிறோம்.
டில்லியில் இருந்து உள்நாட்டு விமானத்தில் வந்த மூன்று பேர் மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சென்றனர். அவர்கள் திருநின்றவூர் திருத்தணி மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். அவர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துளோம்.மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சென்றால் போலீஸ் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரையில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் ஐந்து லட்சம் பேரின் விபரங்களை சேகரித்துள்ளோம். தடுப்பூசி போட 21 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது; 46 ஆயிரம் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.பதப்படுத்தும் மற்றும் சேமித்து வைப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் முதியவர்கள் அதிகம் என்பதால் கூடுதலான தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரிட்டனில் இருந்து தொற்று பாதிப்புடன் வந்தவர் நலமுடன் உள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE