அன்னுார்:'கோவை மாவட்ட குளங்கள், மேட்டுப்பகுதியில் இருப்பதால், அத்திகடவு நீர் வராது' என, கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பொன்னேகவுண்டன் புதுாரில், தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கிராமசபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் பேசுகையில், ''ஈரோடு மாவட்டம், பவானியில், அத்திக்கடவு திட்டத்தில் நீர் எடுக்கும் இடத்திலிருந்து, கோவை மாவட்ட குளங்கள், 120 அடி மேட்டுப்பகுதியில் உள்ளன. இதனால், இந்த குளங்களுக்கு நீர் வர வாய்ப்பு இல்லை.வேடர் காலனி திட்டத்தில், 20 கி.மீ., தொலைவில் உள்ள சிறுமுகையில் இருந்து எடுக்கப்படும் நீரே, அன்னுார் தெற்குப் பகுதியில் உள்ள, 10 ஊராட்சிகளுக்கு, பல ஆண்டுகளாக ஏறுவதில்லை. நீர் இல்லாமல் தவிக்கிறோம். இந்நிலையில், 150 கி.மீ., தொலைவில் இருந்து மேட்டில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வர வாய்ப்பு இல்லை. அத்திக்கடவு திட்டத்தில், அத்திக்கடவிலிருந்து நீர் எடுத்தால் மட்டுமே, கோவை, திருப்பூர் மாவட்ட குளங்களுக்கு, நீர் நிரப்ப முடியும்,'' என்றார்.முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்ரமணி பேசுகையில், ''அன்னுார் ஒன்றியத்தில், 32 இடங்களில் அனுமதி இல்லாமல் 24 மணி நேரமும் மது விற்கின்றனர்,'' என்றார்.நிர்வாகிகள் பேசுகையில், 'இங்கு கழிவுநீர் வடிகால் இல்லை. சாலை வசதி இல்லை. ரோட்டோர முட்புதர், வாகனங்களில் செல்வோரை காயப்படுத்துகிறது' என்றனர்.ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மோகனசுந்தரம் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் முரளி முன்னிலை வகித்தார். பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராஜன், மணி, ஜோதிமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE