அன்னுார்:அன்னுாரில், இட்டேரி பாதையில் புதிய சாலை அமைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலால் மக்கள் நரக வேதனை அனுபவிக்கின்றனர்.கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம் அவிநாசி மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக, அன்னுார் உள்ளது. அன்னுார் நகரில் தினமும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
அன்னுார் கடைவீதி குறுகலாக இருப்பதாலும், புறவழிச்சாலை இல்லாததாலும், நகரில் கடந்த, 10 ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.முகூர்த்த நாட்கள் மற்றும் வாரச்சந்தை நடக்கும் சனிக்கிழமையன்று, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, கோவை சாலை என அனைத்து சாலைகளிலும், 2 கி.மீ., துாரத்துக்கு, வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கமாக உள்ளது. அன்னுாரை கடந்து செல்வதற்கு, 20 நிமிடங்கள் ஆகிறது. இங்கு, தமிழக அரசு சார்பில், கிழக்கு புறவழிச் சாலைக்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. கரியாம்பாளையம் ஊராட்சி, அன்னுார் பேரூராட்சி மற்றும் அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தி, அன்னுாருக்கு கிழக்கே கரியாம்பாளையத்தில் துவங்கி, பட்டறையில் முடியும் வகையில், புறவழிச்சாலை வடிவமைக்கப்பட்டது.ஒன்பது மாதங்களாக...இதற்காக, இரண்டு முறை ஆர்.டி.ஓ., தலைமையில் ஆலோசனை கூட்டம், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுடன் நடந்தது. அதன்பின், கரியாம்பாளையம் ஊராட்சியில் உள்ள நில உரிமைதாரர்களுக்கு, நிலம் எடுப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஒன்றரை ஆண்டு கடந்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.ஊருக்கு மேற்கே புறவழிச்சாலை, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அமைக்க, பலமுறை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை, கடந்த மார்ச் மாதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, கோவை அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதுவும், 9 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால், அன்னுார் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.தற்காலிகமாக மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து ஓதிமலை சாலைக்கு செல்லும் குளக்கரை சாலையை உறுதிப்படுத்தினால், பல வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியும். மேலும், சத்தி சாலையில் இருந்து, அவிநாசி சாலையில், நாகமாபுதூர் வரையுள்ள இட்டேரி சாலையை அகலப்படுத்தி, புதியதாக தார் சாலை அமைத்தால், அந்த வழியாக வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.தொடர்கதைகோவை சாலையில், அன்னுாருக்கும், கரியாம்பாளையத்துக்கும் இடையே, அமுதா மில் சாலையை அகலப்படுத்தி, குமாரபாளையத்தில் இணையும்படி செய்தால், அதிலும் வாகனங்கள் நகருக்குள் வராமல் செல்ல முடியும். ஆனால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ.,வான சபாநாயகர் தனபால், நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா ஆகியோர், எந்த முயற்சியும் எடுக்காததால், போக்குவரத்து சிக்கல் தொடர்கதையாகிறது.
இதுகுறித்து, காடுவெட்டிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சதாசிவன் கூறுகையில் ''அன்னூர் நகரில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் அல்லது உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். அன்னுாருக்கு மேற்கிலும் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். நகரிலுள்ள, இட்டேரி சாலை, அமுதா மில் சாலை, குளக்கரை சாலை ஆகியவற்றை அகலப்படுத்தி உறுதிப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே, அன்னுார் நகரின் போக்குவரத்து நெரிசல் தீரும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE