சென்னை:பச்சயைப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்கும் இடைக்கால நிர்வாகியை விடுவித்து அறக்கட்டளை நிர்வாகத்தை சொத்தாட்சியர் வசம் எடுத்து கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பள்ளிகள் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்த அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் உள்ளன. அறக்கட்டளைக்கான உறுப்பினர்கள் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அறக்கட்டளை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 10 ஆக உயர்த்தியும் அறக்கட்டளையின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட்டது.அறக்கட்டளை உறுப்பினர் தேர்தலை ஆறு மாதங்களுக்குள் நடத்தவும் அறக்கட்டளைக்கு சொந்தமான இரண்டு அரங்குகளை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டிருந்ததை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்களை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அறக்கட்டளை திட்டத்தில் ஏற்படுத்திய மாற்றம் தொடர்பாக உரிய சட்ட விதிகள் பரிசீலிக்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள மாற்றங்களை ரத்து செய்கிறோம். இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்புகிறோம். நாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின்படி இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பரிசீலிக்க வேண்டும். தனி நீதிபதி யார் என்பதை தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்று விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்.அறக்கட்டளையை நிர்வகிக்கும் நிர்வாகி தன்னை பணியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று இடைக்கால நிர்வாகி பொறுப்பில் இருந்து அவர் விரும்பியபடி விடுவிக்கிறோம்.
பச்சையப்பன் அறக்கட்டளை முழு நிர்வாகத்தையும் உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் எடுத்துக் கொள்ள வேண்டும். தனி நீதிபதி இந்த வழக்கை முடிவு செய்யும் வரை அறக்கட்டளையின் சொத்துக்களை அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசித்து நிர்வகிக்க வேண்டும்.அறக்கட்டளை கீழ் இயங்கும் கல்லுாரிகளின் ஆசிரியர்கள் ஊழியர்கள் நியமனங்கள் குறித்து மாறி மாறி குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து ஏற்கனவே வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. எனவே அதுகுறித்து மேல்முறையீட்டு வழக்குகளில் நாங்கள் ஆராயவில்லை. இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE