கொச்சி:'கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது' என, கேரள நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது.கேரளாவை தலைமையிடமாக வைத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.அந்த அமைப்பின் மாணவர் பிரிவின் தலைவரான, கே.ஏ.ராவுப் ஷரீப், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரது காவலை நீட்டிக்கக் கோரி, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அது ஏற்கப்பட்டு, மேலும், மூன்று நாட்கள் அவரை விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மனுவில், அமலாக்கத் துறை கூறியுள்ளதாவது: இந்த அமைப்பு, பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளது. 2013ல் இருந்து இந்த அமைப்புக்கு, வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வந்துள்ளன.அது, 2014ல் அதிகரித்துள்ளது.
இதுவரை, 100 கோடி ரூபாய்க்கு மேல், இந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும், ரொக்கமாக முதலீடுசெய்யப்பட்டுள்ளது.டில்லியில் நடந்த, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, இந்த அமைப்பு, பண உதவி செய்துள்ளது. டில்லியில் கடந்தாண்டு பிப்.,ல் நடந்த வன்முறையை துாண்டிவிட்டதன் பின்னணியில், இந்த அமைப்பு உள்ளது.சமீபத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த வன்முறைக்கும், இந்த அமைப்பே காரணம்.
இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசவிரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. அத்துடன் பல பண மோசடி வழக்குகளையும் விசாரித்துவருகிறோம்.இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE