திருப்பூர்;நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், 7வது பொருளாதார கணக்கெடுப்புக்கு, பொதுமக்கள் தயக்கமின்றி தகவல் அளிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.மத்திய, மாநில அரசுகளின், எதிர்கால திட்டமிடலுக்காக, புள்ளியியல் துறை சார்பில், அடிக்கடி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நாட்டு மக்களின் வளர்ச்சி நிலையை அறிந்து, புதிய திட்டம் தயாரிக்க வசதியாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அதன்படி, நாடு முழுவதும், 7வது பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கடந்த ஜன., மாதம், துவங்கிய பொருளாதார கணக்கெடுப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக கிடப்பில் போடப்பட்டது.சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, கணக்கெடுப்பை முடிக்க வேண்டுமென, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மாவட்டம் தோறும், பொருளாதார கணக்கெடுப்பு பணி முன்னேற்றத்தை, கலெக்டர் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், பொருளாதார கணக்கெடுப்பு நடப்பதால், வீடு மற்றும் நிறுவனங்களுக்கு வரும் கணக்கெடுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பொருளாதார கணக்கெடுப்பு குறித்து, அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் புள்ளியியல்துறை வழிகாட்டுதலுடன், 7 வது பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வருகிறது.நாட்டின் வளர்ச்சிநிலையை உணர்ந்து, நாடி வரும் கணக்கெடுப்பாளரிடம், உண்மையான தகவல் அளிக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம், விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
புள்ளியியல் துறை அதிகாரிகள் கூறுகையில்,'பொருளாதார கணக்கெடுப்பு, மின்னணு முறையில் நடந்து வருகிறது. கணக்கீட்டாளர்கள், தங்களது, 'மொபைல்' போன் மூலம், தகவல்களை நேரடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். அடையாள அட்டையை பார்த்து, பொருளாதார கணக்கெடுப்புக்கான தகவல்களை, தயக்கமின்றி அளிக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE