பொது செய்தி

இந்தியா

திருடன் சொன்ன சாட்சியால் பாதிரியாருக்கு கிடைத்தது சிறை: அபலை அபயாவிற்கு கிடைத்தது நீதி

Added : டிச 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்றனர். இதற்கு காரணமானது திருடன் ஒருவர் அளித்த சாட்சி ஆகும்.கேரளாவிலுள்ள கோட்டயத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில் கன்னியாஸ்திரி அபயா, 21, 1992ல் பிணமாக கிடந்தார் விசாரணை நடத்திய போலீசார் தற்கொலை என முடிவுக்கு வந்தனர். பொதுமக்கள்

கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்றனர். இதற்கு காரணமானது திருடன் ஒருவர் அளித்த சாட்சி ஆகும்.

கேரளாவிலுள்ள கோட்டயத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில் கன்னியாஸ்திரி அபயா, 21, 1992ல் பிணமாக கிடந்தார் விசாரணை நடத்திய போலீசார் தற்கொலை என முடிவுக்கு வந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பிற்கு பிறகு இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரையின் படி வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் ஒன்றாக இருந்ததை அபயா பார்த்துள்ளார்.

இதனால் அபயாவின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை கொலை செய்து தாமசும், செபியும் உடலை கிணற்றில் வீசியது சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்தது. இதனை பார்த்த நேரடி சாட்சியான அடைக்கா ராஜூ என்ற திருடன் அளித்த சாட்சியம் தான் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை கிடைக்க காரணமானது.


கொலையா தற்கொலையா

1990 களில் சிறிய திருடனாக இருந்தவர் அடைக்கா ராஜூ. இவர் சம்பவம் நடந்த கிறிஸ்தவ பள்ளி வளாகத்தில், சம்பவத்தன்று காலை 4:00 மணிக்கு செப்பு கம்பிகள் திருட சென்றுள்ளார். தொடர்ந்து மூன்று நாட்கள் இதே நேரத்தில் திருடச்சென்று கொஞ்சம் கொஞ்சமாக கம்பிகளை கைவசமாக்கிவிட்டார். மூன்றாவது நாள் திருட சென்ற போது தான், இப்போது தண்டனை பெற்றுள்ள பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் சேர்ந்து அபயாவை துாக்கி கிணற்றில் இடுவதை பார்த்துள்ளார்.

பின்னர் பயந்து போய் சத்தமிடாமல் வெளியே வந்து விட்டார்.மறுநாள் போலீஸ் விசாரணை நடக்கும் போது, இவரும் சம்பவ இடத்தில் நின்று பார்த்துள்ளார். அபயா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற ரீதியில் வழக்கை போலீசார் விசாரித்தனர். அப்போது இவர் பார்த்த காட்சியை சொன்ன போது யாரும் நம்பவில்லை. தான் திருட வந்த போது பார்த்தேன் என்று சொன்ன போதும் போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக இவரே அபயாவை கொலை செய்து விட்டார் என்று வழக்கை புனைந்து கைது செய்தனர்.

அபயாவை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்ளுமாறு அவரை சித்திரவதை செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.


அரசியல் நிர்ப்பந்தம்



கத்தோலிக்க திருச்சபையின் அரசியல் நிர்ப்பந்தத்தால் கேரளாவில் மாறி மாறி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் அரசுகள் இதனை தற்கொலை வழக்காகவே கருதி வழக்கை முடித்தது. பின்னர் நீதிமன்றம் தலையிட்டு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு பாதிரியார் கைது செய்யப்பட்ட போதும் போதிய சாட்சிகள் இன்றி, வழக்கை சி.பி.ஐ., முடித்தது. பின்னர் மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ.,யில் புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் தான் கேட்கப்படாத சாட்சியாக, கவனிக்கப்படாத சாட்சியாக இருந்த ராஜூவை விசாரித்து சாட்சியாக்கினர். திருடனாக இருந்தவர், பொய் சொல்கிறார் என உள்ளூர் போலீஸ் கூறியதை புறந்தள்ளி, அரசியல் நிர்ப்பந்ததிற்கு அடிபணியாமல், சி.பி.ஐ., இவரை நேரடி சாட்சியாக்கியது. இதுவே வழக்கிற்கு பலம் சேர்த்தது. நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு கன்னியாஸ்திரிக்கும், பாதிரியாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.


ஆத்மா சாந்தியடையும்



அடைக்கா ராஜூ அளித்த பேட்டி:நான் அன்று சிறிய அளவில் திருடுவேன். நான் திருடத்தான் அங்கு சென்றேன். பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோரை நான் அங்கு பார்த்தேன். ஆனால் இதனை நான் போலீசிடம் சொன்ன போது நான் தான் கொலை செய்ததாக கூறிவிட்டனர். நான் தான் அபயாவை கொலை செய்தேன் என்று கூறுமாறு அடித்து துன்புறுத்தினர். நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் 64 நாட்கள் போலீஸ் காவலில் இருக்க வைத்து, எனக்கு ஆசைக்காட்டினர்.

அபயாவை கொன்றதாக ஒத்துக்கொண்டால், எனக்கு வீடு, பணம், மனைவிக்கு வேலை தருவோம் என்று ஆசை காட்டினார்கள்.நான் ஏழை தான்; அதற்காக அநீதிக்கு துணை போக மாட்டேன். எனக்கும் பெண் குழந்தை இருக்கிறது. மனசாட்சி இருக்கிறது. அபலையான அபையாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று என் கருத்தில் உறுதியாக இருந்தேன். பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் தண்டிக்கப்பட்டதால் 28 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அபயாவின் ஆத்மா சாந்தியடையும்.இவ்வாறு கூறினார்.

திருட்டு தொழிலை அன்றே விட்டு, மனம் மாறி தற்போது கூலி தொழிலாளியாக இருக்கும் ராஜூவின் நேர்மையை பாராட்டி பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். பணத்திற்கு அடிபணியாமல் நீதியை நிலைநாட்ட துணை நின்ற இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

நமது சிறப்பு நிருபர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-டிச-202002:11:44 IST Report Abuse
தமிழவேல் இதுக்கு யாருக்காவது தண்டனைக்கு கொடுத்தாங்களா ? // அபயாவை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்ளுமாறு அவரை சித்திரவதை செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.//
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X