தமிழகத்தில் தேர்தல் திருவிழா ஆரம்பிக்கவுள்ளது. வழக்கம் போல இந்த தேர்தலிலும் அரசியல் கட்சிகள் 'நாங்கள் வெற்றி பெற்றால் அதை செய்வோம்... இதை செய்வோம்...' என வீரவசன வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்க தயாராகிக்கொண்டு இருக்கின்றன.
ஆனால் பொதுவாக தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படுகிறதா? அப்படி நிறைவேற்றப்படவில்லை என்றால் அந்த ஆட்சியை நீக்க சட்டத்தில் இடமிருக்கா? அல்லது அந்த ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா.ஒவ்வொரு முறையும் நல்லாட்சி அமைய வேண்டும் என்று நாம் நினைத்தாலும் நம்மால் என்ன செய்ய இயலும் என்று ஒதுங்கி போகும் பெரும்பாலான சதவீதம் வாக்காளர்கள் இத்தேர்தலில் விழித்துக்கொள்ள முன்வரவேண்டும்.
ஏனெனில் ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் என்றார் மால்கம் எக்ஸ்.அப்படிப்பட்ட தோட்டாக்களை நாம் நோட்டாக்களாக வீணடிக்கலாமா? அல்லது நோட்டுக்களுக்குத்தான் விற்கலாமா?உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 35 சதவீதம். ஆனால் இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அதைவிட அதிகமாம். அதனால் பெண்களே கொஞ்சம் யோசிப்போம். இதுவரை மவுனிகளாக இருந்தது போதும். இனி எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம். அரசியல் கட்சிகளுக்காக சில...
வேண்டாம் நிர்பயாக்கள்
நள்ளிரவு இளம்பெண் ஒருவர் நகைகள் அணிந்து தனியாக ரோட்டில் நடக்க முடியும் என்றால் அதுதான் உண்மையான சுதந்திரம் என்றார், மகாத்மா. ஆனால் பால்மனம் மாறா குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன. இதை காணும்பொழுது நெஞ்சு பொறுக்குதில்லையே. அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது? அத்தகைய கயவர்களின் கதையை அப்பொழுதே முடிக்க வேண்டாமா?
அதுபோன்ற கயவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களை கதிகலங்க வைக்க வேண்டும். பெண்மையை குதறும் கழுகுகளின் கூடாரம் மாளிகை என்றால் அவர்களை மகான்களாக்கி காணிக்கைகளை வாங்கி காப்பாற்றும் அரசுகள் நமக்கு வேண்டாம். இது மாற வேண்டும்.
மது விலக்கால் மனம் குளிரும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு போல் கணவனை இழந்த பெண்களை கணக்கெடுங்கள். 99 சதவீத மரணம் மதுவால் ஏற்படுகிறது. அரசியல் பிரசாரக் கூட்டத்திற்கு பிரியாணியும், மதுவும் துாண்டிலாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.சாதிக்க பிறந்தவர்களை விட குடித்து குடித்து சாக பிறந்தவர்களே அதிகம் என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று குடிபோதையில் தெருவில் விழுந்து கிடப்பது அப்பாக்கள் மட்டும் அல்ல அவர் பெற்ற பிள்ளைகளும் தான்.
நல்ல குடிமகன்களை எல்லாம் குடிகாரர்களாக்கி குழந்தைகள் வாழ்வையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது அரசு.“ஒரு பெண்ணின் தாலி அறுக்க காரணமாகி நீதி தவறிவிட்டேனே” என உயிரை மாய்த்த பாண்டிய மன்னன் ஆண்ட நாட்டின், அரசு இயந்திரம் சாராயத்தால் இயங்குகிறது; பல தாலிகளை பலி வாங்கிக்கொண்டு! மதுவுக்கு அடிமையான புருஷனுடன் மாரடிப்பதை நிறுத்தி விட்டு மனசாட்சி மிக்க தலைவனை தேர்ந்தெடுப்போம்.
ஒழிய வேண்டும் 'லஞ்சப் பேய்'
இன்றைய சூழ்நிலையில் ஒரு நாள் முதல்வனால் மட்டும்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். ஐந்து ஆண்டுகள் அரசியலில் குப்பை கொட்ட வேண்டும் என்றால் லஞ்சம் ஊழல்களால் தான் அது முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.நடிகர் விவேக் பாணியில் 'அதற்கு ஒரு பொட்டு வச்சு பூ முடிச்சு பார்க்க ஒரு ஆளவந்தான் வரமாட்டாரான்னு' மனம் ஏங்குது. இதற்கு தேவை ஒரு பெரும்முற்றுப்புள்ளி.
வேண்டாம் தனியார் மாயம்
அரசு துறைகள் எல்லாம் தனியார் வசமானால் நாளை தலைவரை தேர்ந்தெடுப்பதும் தனியார் மயமாகும் என்ற கவலை எழுகிறது. நிர்வாகத் திறமையால் மட்டுமே ஒரு துறையை செம்மையாக செயல்படவைக்க முடியும். கேள்விகேட்க யாருமில்லை என்ற எண்ணமும், பணத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்ற ஆணவமும் இன்று பல துறைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு சொல்லும் ஓர் அரசு உருவாக வேண்டும்.
'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை'என சாத்தியமில்லாததை சொல்லி எங்களை உசுப்பேத்த வேண்டாம். அரசு வேலையில் இருப்பவர்கள் ஒழுங்காக வேலை பார்த்தாலே எல்லோருக்கும் எல்லா வேலையும் கிடைக்கும். ஒவ்வொருவரும் கடமையை செய்தால் அரசு வேலையாக இருந்தால் என்ன தனியார் வேலையாக இருந்தால் என்ன, சுயதொழிலாக இருந்தாலும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்களுக்கு விதைக்கும் புதிய அரசு வேண்டும்.
தண்ணியில கண்டம்
நம்ம ஊர்ல மட்டும் தான் மழை வந்தாலும் பிரச்னை. வராவிட்டாலும் பிரச்னை வருது. வந்த நீரை சேமிக்க வழியில்ல. அந்த நீர் போறதுக்கு பாதையும் இல்ல. மழை வரவில்லைனா இன்னும் அதோகதிதான். குழாயடியில பெண்கள் சண்டை போடுறாங்கனு கிண்டல் பண்ண தெரிஞ்சவங்களுக்கு நீருக்காக நடக்கப்போகும் மூன்றாம் உலகப்போரின் 'டீசர்' தான் அது என புரிந்து புதிய அரசு அதற்கான திட்டங்களை கொண்டுவர வேண்டும்.
பேச்சு வேண்டாம்; எழுதி கொடுங்கள்
இதுவரை கூறியவை அனைத்தும் பெரும்பாலான மக்களின் உள்ளக் குமுறல்கள். இன்றைய சூழ்நிலையில் தமிழக மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இவை தான். தேர்தல் நேரத்தில் வீரவசன வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு வெற்றி பெற்ற பின் அதை செய்யாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழும். எனவே வாக்குறுதிகளை பேச்சாக மட்டும் கொடுக்காமல் எழுத்துக்களாக்கி பத்திரங்களில் எழுதி பதிவு செய்து கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அதில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மக்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதியும் அளிக்க வேண்டும்.
'குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு'
என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப யாருக்கும் எதற்கும் அடிபணியாத மக்களாட்சிக்கு மட்டும் தலைவணங்கும் ஓர் ஒப்பற்ற தலைவன் வேண்டும் என்பதையும், அதை கொடுக்கும் கட்சியை தேர்வு செய்யவும் மக்கள் தயாராகிவிட்டனர். சீர்திருத்த வாக்குறுதிகளை பதிந்து தரும் கட்சிகளுக்கு மட்டும் சிந்தித்து வாக்களிப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
- எஸ். அன்பரசி,
எழுத்தாளர்மதுரை.
vijay.anbu764@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE