மதுரை:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பெண் பூஜாரிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டி பூஜாரி பின்னியக்காள் தாக்கல் செய்த மனு: உசிலம்பட்டி லிங்கநாயக்கன்பட்டி துர்க்கையம்மன் கோயிலில் பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தினர் பூஜாரியாக இருந்தனர். என் தந்தை பின்னத்தேவருக்கு நான் ஒரே வாரிசு. அவர் பூஜாரியாக இருந்தபோது உடல்நலம் பாதித்தது. அப்போதிருந்து நான் பூஜாரி பணி செய்தேன். 2006 ல் தந்தை இறந்தார். பின் நான் பூஜாரி பணியை தொடர்ந்தபோது, பெண் என்ற பாகுபாடு காரணமாக சிலர் பிரச்னை செய்தனர்.
நான் பணி செய்யக்கூடாது; வேறோருவர்தான் பூஜாரி என 2007 ல் தாசில்தார் தடை விதித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தேன். தனி நீதிபதி, 'பூஜாரி பெண் என்ற காரணத்தினால் பணி செய்ய தடுப்பது தவறு. மனுதாரரை (என்னை) பூஜாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும்,' என 2008 ல் உத்தரவிட்டார்.
இதற்கு எதிரான மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.நான் பூஜாரியாக தொடர உசிலம்பட்டி நீதிமன்றம் அனுமதித்தது. இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.என்னை பணி செய்யவிடாமல் சிலர் தடுக்கின்றனர். போலீஸ் பாதுகாப்பு அளிக்க போலீசில் மனு அளித்தேன். பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பூஜாரி பின்னியக்காள் மனு செய்தார்.நீதிபதி ஜெ.நிஷாபானு: மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE