பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்
- நமது நிருபர் -
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு, தமிழக பா.ஜ.,வினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழா ஒன்றில், திருமாவளவன் பேசியதாவது:உலகில், இந்தியாவில் மட்டும், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கிற ஹிந்துக்கள், இங்கிருந்து இடம் பெயர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்கள், வெளிநாட்டுக்காரர்கள் அல்ல.கிருஷ்ண பகவானின் போதனைகள் என கூறப்படும் பகவத் கீதையில் தான், மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும் வகையில், நான்கு வித வர்ணங்கள் உள்ளன.இவ்வாறு, திருமாவளவன் பேசினார்.'கிருஷ்ண பகவான் தான், ஹிந்து மதத்தில் ஜாதிகளை ஏற்படுத்தினார்' என, திருமாவளவன் பேசியது, ஹிந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார்: ஹிந்து மதத்தினுடைய நம்பிக்கைகளை, கோவில்களை, புனித நுால்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக, திருமாவளவன் வைத்துள்ளார். சனாதன எதிர்ப்பு என, நடப்பில் இல்லாத மக்களுக்கு தெரியாத மனுநீதி குறித்து, தேவையற்ற கருத்தை பேசி, சர்ச்சையை உருவாக்கினார்.தற்போது, ஜாதிப் பிரிவுகளை உருவாக்கியது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான் என, சொல்லியிருக்கிறார். நான்கு விதமான வர்ணங்களை, நானே உருவாக்கினேன் என்பது பிறப்பினால் அல்ல. குணத்தின் அடிப்படையில், ஒரு மனிதனுக்கு மதிப்பு உருவாகியது என்பது தான், கீதை சொல்லக் கூடிய தத்துவம்.அனைத்து மத மக்களுடைய உணர்வுகளை, மாண்புடன் மதிக்க வேண்டும் என, உறுதிமொழி எடுத்து, எம்.பி., பதவி ஏற்ற திருமாவளவன், ஹிந்து மதத்திற்கு எதிராக கடைப்பிடிக்கிற போக்கை, மாற்றிக் கொள்ள வேண்டும்.பா.ஜ., இளைஞரணி தேசிய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம்: ஏற்கனவே, ஹிந்து பெண்களை இழிவுப்படுத்தி பேசி, சர்ச்சையை உருவாக்கியவர். தற்போது, மீண்டும் ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தி உள்ளார். சிதம்பரம் லோக்சபா தொகுதியில், மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை.தொகுதி மக்கள் கேட்கிற கேள்விக்கு பதில் கூற முடியாமல், அதை திசை திருப்பும் முயற்சியில், ஹிந்து மதத்தை பற்றி தேவையில்லாமல் விமர்சித்துள்ளார்.பகவத் கீதை, ஹிந்து மக்களின் புனித நுாலாக கருதப்படுகிறது. மனிதர்கள் செய்கிற தொழில், குணம் அடிப்படையில், நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கீதை சொல்லக்கூடிய தத்துவத்தை, திருமாவளவன் திரித்து பேசுகிறார். மனுநீதி பற்றி தேவையில்லாமல் பேசி, ஹிந்து மக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார்.கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தி பேசிய, கறுப்பர் கூட்டத்தினால், தி.மு.க., கூட்டணி மீது, ஹிந்து மக்களுக்கு கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. திருமாவளவனின் பேச்சினால், ஹிந்துக்களின் ஓட்டுக்கள், தி.மு.க., கூட்டணிக்கு இல்லை என்பது, ஊர்ஜிதமாகி விட்டது.தமிழக பா.ஜ., கலை, இலக்கிய பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம்: கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதத்தில், ஜாதி பிரிவுகள் உள்ளன. அந்த ஜாதிகளை எல்லாம், கிருஷ்ணர் தான் உருவாக்கினாரா?ஹிந்து மதத்தையும், ஹிந்த மக்களையும் தொடர்ந்து எதிர்த்து வருதையே, தன் கொள்கையாக வைத்துள்ளார். தலித் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுப்பட்டதை, அவர் பேசலாம். தொகுதி மக்களுக்கு செய்த நல்ல திட்டங்கள், மத்திய அரசின் சாதனை திட்டங்கள் போன்ற, நல்ல விஷயங்களை, அவர் பேசமாட்டார். ஆனால், பெண்களை இழிவாக பேசுவதில் தான் அக்கறை காட்டுகிறார்.ஏற்கனவே, என்னையும் அவதுாறாக பேசினார். தேசிய மகளிர் ஆணையத்திடம், புகார் தெரிவித்துள்ளேன். பெண்கள் அமைப்புகளும், அவருக்கு கண்டனங்கள் தெரிவித்தன. ஆனாலும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.தலித் இளைஞர்களை படிக்க வைப்பதற்கும், வேலை வாய்ப்பு வாங்கி கொடுப்பதற்கும், அவர் முயற்சி எடுக்கலாம். அதை எல்லம் விட்டுவிட்டு, ஹிந்துகளுக்கும், ஹிந்து மதத்திற்கும் விரோதமாக, அவர் தொடர்ந்து பேசி வருவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE