கோவை:பி.ஏ.பி., திட்டத்தில், நீர் பங்கீடு தொடர்பாக, தமிழகம் - கேரள மாநில அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு சுமுகமாக முடிந்தது.
பரம்பிக்குளம் - ஆழியாறு (பி.ஏ.பி.,) திட்டத்தில், தமிழகம் - கேரள மாநிலங்களுக்கு இடையே, நீர் பங்கீடு தொடர்பான பேச்சு, கோவையில் நடந்தது; தமிழக பொதுப்பணித்துறை, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஒப்பந்தப்படி, ஆழியாறு அணையில் இருந்து, ஆண்டுக்கு, 7.25 டி.எம்.சி., சோலையாறு அணையில் இருந்து, 12.3 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 1 முதல் மே 31 வரை கணக்கீடு செய்து, தண்ணீர் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும், 15 நாட்களுக்கு ஒருமுறை எவ்வளவு தண்ணீர் தேவை என, கேரளா தரப்பில் கேட்கப்படும்; அதன்படி, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
கடந்த ஜூன் முதல் தற்போது வரை வழங்கிய நீரின் அளவை கழித்து விட்டு, ஒப்பந்தப்படி, மீதமுள்ள அளவு வழங்க, தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தரப்பில், 'கேரளாவில் வறட்சியாக இருக்கிறது; விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக நீர் வழங்க வேண்டும். இரு ஆண்டுகளுக்கு முன், மழை பெய்தபோது, 2.5 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட்டது; தற்போது, 1.5 டி.எம்.சி.,யாவது கூடுதலாக வழங்க வேண்டும்' என, கோரப்பட்டது.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில், 'அணைகளில் உள்ள நீர் இருப்பை கொண்டே, பங்கீடு செய்ய முடியும். மழை பெய்தபோது, அணை நிரம்பி வழிந்து, ஆற்றில் சென்ற தண்ணீரை தற்போது கணக்கிடுவது சாத்தியப்படாது. ஒப்பந்தப்படி, தண்ணீர் தர தயாராக இருக்கிறோம். கூடுதலாக திறந்தால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர்' என, உறுதியாக தெரிவித்தனர்.
இதையடுத்து, வரும், 2021 மே, 15 வரை, இன்னும் வழங்க வேண்டிய நீரின் அளவு கணக்கிடப் பட்டது. மே, 15க்கு பின், ஜூன், 1க்கு முன்னதாக, இரு வாரத்துக்கு தேவைப்படும் தண்ணீர் தொடர்பாக, வரும் ஏப்., மாதம் மீண்டும் ஆலோசனை நடத்தி பேசிக்கொள்ளலாம். அப்போது, அணையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, பகிர்ந்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இரு மாநில அதிகாரிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒரே ஆண்டில்...
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பி.ஏ.பி., திட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநில அதிகாரிகளுக்கும் இடையே, 12 மணி நேரம் பேச்சு நடந்தது. கூடுதலாக தண்ணீர் கேட்டதால், முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. பரம்பிக்குளம் தொகுப்பு அணைகளில், 16.5 டி.எம்.சி., தண்ணீர் இருந்தால், 2.5 டி.எம்.சி., கூடுதலாக வழங்கலாம். அதை அந்தந்த ஆண்டுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். பெற முடியாத பட்சத்தில், அந்த அளவீட்டை, அடுத்தடுத்த ஆண்டுகளில் கேட்கக்கூடாது என தெளிவாக கூறி விட்டோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE