திருச்சி: வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, பெருமாள் திருத்தலங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 14ம் தேதி இரவு, மூலவர் அனுமதி பெறும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் என்ற மோகினி அலங்காரத்தில், அர்ச்சுண மண்டபத்தில் எழுந்தருளினார்.

வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை, 3:30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 4:55 மணிக்கு, ரத்தின அங்கியுடன் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாக, நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நேற்று மாலை, 6:00 மணி முதல், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளிய பின், இன்று காலை 8:00 மணி முதல் பக்தர்கள், பரமபத வாசல் வழியாக செல்லவும், சுவாமி தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுவர்.
ரெங்கா.. ரெங்கா..
திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் திருத்தலங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE