பொன்னேரி; பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதால், அரசு மருத்துவமனையில் நிரந்தர பதிவாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னேரி அரசு மருத்துவமனையில், மாதம், 100 - 120 மகப்பேறுகள் நடைபெறுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், பொன்னேரி பேரூராட்சி மூலம் வழங்கப்பட்டு வந்தது.அதேபோன்று விபத்து, தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்களில் இறந்தவர்கள், பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பேரூராட்சி மூலம் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.இரண்டு ஆண்டுகளாக, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையிலேயே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.இதற்காக, தனி பதிவாளர் நியமிக்கப்படாமல், மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அலுவலருக்கு கூடுதல் பணியாக வழங்கப்பட்டது.பல்வேறு பணிச் சுமைகளால், அலுவலர் வாரத்திற்கு ஒருமுறை வந்து செல்வதால், பொதுமக்கள் உரிய நேரத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.ஆந்திர மாநில எல்லையில் உள்ளவர்களும், பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெறுகின்றனர். அவர்கள் பிறப்பை பதிவு செய்து, சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு என, தனி பதிவாளர் ஒருவரை நியமித்து, உடனுக்குடன் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE