கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு, அரசு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கவுன்சிலர்கள் முறையிட்டனர்.கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், சேர்மன் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. துணை சேர்மன் மாலினி, பி.டி.ஓ., கவுரி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், செலவு கணக்கு, அனுமதி, திட்டங்கள் உட்பட, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை தொடர்ந்து, கவுன்சிலர்கள் குறைகளை முன் வைத்தனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கிராமபுறங்களுக்கு அரசு பஸ் வசதி வேண்டும் என, கோரிக்கையை முன் வைத்தனர்.கவுரி (தி.மு.க): நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் துார்ந்து போனதால், கன மழை பெய்தும், ஆத்துப்பாக்கம் பெரிய ஏரி நிரம்பவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய் துார் எடுக்க வேண்டும்.நாகராஜ் (அ.தி.மு.க): தண்டலம் -- முக்கரம்பாக்கம் கிராமங்களுக்கு இடையே, ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் நிறுவ வேண்டும். முக்கரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்து உள்ளது. அதை சீரமைத்து கிராம மக்கள் பயன் பெறும் வகையில், உரிய மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.ரவிகுமார் (மா.கம்யூ.,): மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் இயங்காததால், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் முறையிட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.மேற்கண்ட கோரிக்கை மீது தீர்வு காணப்படும் என, சேர்மன் சிவகுமார் உறுதி அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE