திருச்சூர் சகோதரர்களான கிருஷ்ணமோகனும், ராம்குமார் மோகனும், கச்சேரியில் மெயினாக எடுத்துக் கொண்டது, 'வசந்தா ராகம்' என்றாலும், 'தோடி' ராகத்தில் அளித்த, சியாமா சாஸ்திரியின் ஸ்வரஜதியைப் பற்றிக் குறிப்பிடாமல், இந்த விமர்சனம் முழுமையடையாது.முன்னர், அலங்கரிக்கவென ராக ஆலாபனை தேவையில்லை, பாட்டிற்குப்பின் வரக்கூடிய கற்பனை ஸ்வரங்களுக்கும் அவசியம் இல்லை.கற்பனை ஸ்வரங்கள்பீத்தோவன், மோட்ஸார்ட் போன்றோரின், 'சிம்பொனி' போலவே, தனித்து விளங்கக் கூடியது.காலஞ்சென்ற இசை விமர்சகர், எஸ்.வி.கே., சியாமா சாஸ்திரி 'இவற்றை மட்டும் இயற்றியிருந்தால் போதும். இசையின் சரித்திரத்தில் இடம் பிடித்திருப்பார்' என்ற அபிப்பிராயத்தைத் தெரிவித்திருப்பார்.இதை, திருச்சூர் சகோதரர்கள் பாடிய முறை திருப்தியை அளித்தது, முறையாகவும் இருந்தது. பாடலின் முதல் வரி, 'ராவே ஹிமகிரி குமாரி...'இவ்விடத்தில் முக்கியமாக வயலினிழைத்த சாய் ரக்ஷித், இதன் மகத்துவத்தைப் பேணிப் பாதுகாத்தபடி எடுத்து சென்றது, தனி சிறப்பு. அதே தன்மையுடன் லய வித்வான்கள், மிருதங்கத்தில் திருச்சூர் மோகனும், கஞ்சிராவில் பி.எஸ்.புருஷோத்தமனும் செயல்பட்டனர்.தவிர, 'சாகேதநகர' எனும் ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த, மைசூர் சதாசிவ ராவின் பாடலின், 'ராமசந்தர பூபால...' எனுமிடத்தில், முழு நெரவலும் கற்பனை ஸ்வரங்களும் வழங்கினர், சகோதரர்கள். மெயினான, வசந்தா ராக ஆலாபனையில், நிறைய ஹிந்துஸ்தானிக்கான பிரயோகங்கள் வந்து நின்றன. கேட்பதற்கு நன்றாகத்தான் இருந்தது.இசைப் பண்டிதர்கள் என்ன சொல்வரோ? இருவர் பாடுவதென்றால், அதில் ஒருவிதமான ஆரோக்கியமான போட்டி நிலவும். இங்கு அப்படிஇல்லை. ஒருவர் மற்றொருவருக்கு விட்டுக் கொடுப்பதே பெரும்பாலும் நடைபெற்றது. வந்த பாடல் தீக்ஷிதரின் 'ஹரிஹர புத்ரம்...'தத்துவப் பாடல்இவர்கள், தியாகராஜரின் 'நளினகாந்தி' ராக பாடலான 'மனவியாலகிஞ்சரா...' கோபாலகிருஷ்ண பாரதியின், 'பித்தம் தெளிய...' என்ற செஞ்சுருட்டி ராக தத்துவப் பாடல்களையும் பாடி, பத்ராசல ராமதாசரின், 'ராமச்ந்த்ராய ஜனக...' என்ற மங்களத்துடன், நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.கச்சேரி முடிந்த பின், சற்றே நிதானித்து சிந்தித்தால், ஒரு கலையில் 'அமுங்கி முழுகுவது' என்பார்களே, அது அவ்வளவாக இல்லையோ என்ற எண்ணம் தோன்றிற்று. கச்சேரிகள் என்ற வட்டத்துக்குள், இவர்கள் சுற்றி சுற்றி வருகிறார்களோ? அதை எதிர்நோக்கிய பயணமாகத்தான் அனைத்தையுமே அமைத்துக் கொள்கிறார்களோ? ஆனால், காலம் இவர்களின் முன்னே விரிந்து கிடக்கிறது, தெரிந்த விதிகளுக்கும் கட்டங்களுக்கும் அப்பால் சென்று, இவர்கள் தங்களை நிலைநாட்டிக் கொள்வார்களாக!வயலினில், சாய்ரக்ஷித் கீர்த்தனைகளை அவற்றின் சங்கதிகளின் வரிசைக் கிரமங்களுடன் சகோதரர்களுடன் இணைந்து வாசித்து, வசந்தா ஆலாபனையை, இளவயதினராயிருப்பினும், நன்கு சீலப்பட்டவரின் நுண்வேலைப்பாடுகளுடனேயே வடிவமைத்துக் கொடுத்தார் என்பதை கவனித்தோம்.லய வித்வான்கள் இருவரும், பாடல்களுக்குத் தக்கபடியான நடையளித்து வாசித்து, தனியின் போது இருவரும் தனித்தனியாகவும் சேருமிடங்களில் சேர்ந்தும், பெரிதளவில் ஆர்ப்பாட்டமில்லாமல் வாசித்தது, மெச்சத்தக்கதாய் இருந்தது.- எஸ்.சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE