சென்னை; கணினி மின் தடை நீக்கும் மையத்தில் புகார் அளிப்போருக்கு, புகார் பெற்றதை உறுதிப்படுத்தும் வகையில், குறுஞ்செய்தி வாயிலாக, பதிவு எண் அனுப்ப, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், கணினி மின் தடை நீக்கும் மையம் உள்ளது. அங்கு, மின் தடை தொடர்பாக, 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், 24 மணி நேரமும், மக்கள் புகார் அளிக்கலாம். அங்கு பெறப்படும் புகார், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்நிலையில், கணினி மையத்தில் புகார் அளிப்போருக்கு, புகார் பெற்றதை உறுதிப்படுத்தும் வகையில், எஸ்.எம்.எஸ்., அனுப்ப, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரும்பாலான நுகர்வோர், மொபைல் போன் வாயிலாகவே, கணினி மையத்தில் புகார் அளிக்கின்றனர். அவ்வாறு புகார் அளிக்கும் போது, கணினி மைய ஊழியர், அதை பதிவு செய்தாலும், அந்த விபரம், நுகர்வோருக்கு தெரிவதில்லை.எனவே, இனி புகார் அளிக்கும் நபருக்கு, புகார் பதிவு செய்ததற்கான பதிவு எண்ணுடன் கூடிய, எஸ்.எம்.எஸ்., நுகர்வோருக்கு அனுப்பப்படும். மீண்டும் மின்சாரம் வழங்கியதும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மற்றொரு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அந்த பணி, 14 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE