மும்பை: விதிமுறை மீறலுக்காக, என்.டி.டி.வி., நிறுவனர்களான பிரன்னாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோருக்கும், ஆர்.ஆர்.பி.ஆர்., ஹோல்டிங் நிறுவனத்திற்கும், ரூ.27 கோடி அபராதமாக செபி விதித்தது.
விஷ்வபிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் (வி.சி.பி.எல்) உடனான கடன் ஒப்பந்தங்கள் குறித்து பங்குதாரர்களுக்கு தெரிவிக்கவில்லை என என்.டி.டி.வி.யின் பங்குதாரரான குவாண்டம் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், கடந்த 2017ம் ஆண்டு செபியிடம் புகார் அளித்திருந்தது.
ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்காக, விசிபிஎல் உடன் ரூ.350 கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில் என்டிடிவி கடந்த 2009ல் கையெழுத்திட்டுள்ளதாகவும், மீண்டும் ஒரு ஆண்டு கழித்து, அந்நிறுவனத்திடம் ரூ.53.85 கோடிக்கு கடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் செபி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த 52 பக்க கடன் ஒப்பந்தத்தில், என்.டி.டி.வி யின் செயல்பாட்டை கணிசமாக பாதிக்கும் உட்பிரிவுகள் மற்றும் நிபந்தனைகள் இருந்ததாகவும், வாரண்டுகளை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பங்குகளாக மாற்றுவதன் மூலம், என்டிடிவியின் 30 சதவீத பங்குகளை மறைமுகமாக விசிபிஎல் பெற அனுமதித்ததாகவும் செபி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பங்குதாரர்களிடமிருந்து, கடன் ஒப்பந்தங்கள் தொடர்பாக தகவல்களை மறைத்து, பத்திர விதிமுறைகளை மீறியதற்காக, என்.டி.டி.வி., நிறுவுனர்களான பிரன்னாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோருக்கும், ஆர்.ஆர்.பி.ஆர்., ஹோல்டிங் நிறுவனத்திற்கும், ரூ.27 கோடி அபராதமாக செபி விதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE