திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளன.
பழநியில் தைப்பூச திருவிழா ஜன.21 ல் துவங்கி ஜன.31 வரை நடக்கிறது. திண்டுக்கல் - பழநி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ரோட்டோரம் பேவர் பிளாக் கற்களால் 63 கி.மீ., நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்ட, வெளி நாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் மதுரை, திண்டுக்கல், கோவை வழியே பழநிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்தாண்டு தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கியுள்ளனர்.
அவர்களுக்கான நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. பாதயாத்திரை வரும் பக்தர்களின் கால்களை கற்கள் பதம் பார்க்கின்றன. பாதையின் இருபுறமும் முட்புதர்கள், செடிகள் வளர்ந்து பாதையே தெரியாத அளவிற்கு மண்டிக் கிடக்கிறது. மது பிரியர்கள் நடைபாதையிலேயே பாட்டிலை உடைத்து சென்றுள்ளனர்.
இது கால்களை கிழித்து காயம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. வரும் நாட்களில் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். அதற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறையினர் நடைபாதையை சீரமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE