புதுச்சேரியை உலக வரைபடத்தில் இடம் பெற செய்யும் தகுதி, மக்கள் நீதி மையத்திற்கு உள்ளது. ஊழல் செய்பவர்களும், ரவுடிகளும் மாறி, மாறி அதிகாரத்தை கைப்பற்றி, புதுச்சேரியை சீரழைத்து விட்டனர். வரும் சட்டசபை தேர்தலில் எனது நேரடி மேற்பார்வையில், மக்கள் நீதி மையம் போட்டியிடும். புதுச்சேரியை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.- நடிகர் கமல் ஹாசன்
'ஏற்கனவே, மகான் ஸ்ரீ அரவிந்தரால், பல ஆண்டுகளுக்கு முன்பே, புதுச்சேரி உலகம் அறிந்த நகரமாக மாறி விட்டது; நீங்கள் வந்து ஒன்றும் செய்ய வேண்டிய தேவையில்லை...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன் பேச்சு.
நான் கிராமத்தில் பிறந்தவன். 24 கி.மீ., பயணம் செய்து தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அந்த கால கட்டத்தில் போதிய மருத்துவமனை இல்லை. அதனால் தான் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அம்மா 'மினி கிளினிக்' திறக்கப்பட்டுள்ளது.- இ.பி.எஸ்., தமிழக முதல்வர்
'இதை ஏன், மூன்றாண்டுகளுக்கு முன்பே திறக்கவில்லை; தேர்தல் நேரத்தில் திறப்பது தான் சர்ச்சையாகி வருகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், இ.பி.எஸ்., தமிழக முதல்வர் பேச்சு.
தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக, பணி நிரந்தரம் கோரி, போராடி வருகின்றனர். அவர்களிடம் ஆதாயமடைவது குறித்து, ஆட்சியாளர்கள் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்
'எதில் ஆதாயம் பார்க்கலாம் என்பதில் உங்களுக்கு அனுபவம் ஜாஸ்தி போல தெரிகிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.
ரஜினியையும், கமலையும் அடிக்கிற அடியில், இனி எந்த நடிகனும் அரசியலுக்கு வரக் கூடாது. நடித்தால் மட்டுமே நாடாளும் தகுதி வந்து விட்டது என்ற எண்ணம் மாற வேண்டும்.- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

'இப்படி பேசி பேசியே, தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற, நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் போலும்...' என கண்டனம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக, கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க, அந்த மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் மறுத்துள்ளார். இது, ஜனநாயக விரோத செயல்.- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி
'கேரள கவர்னர் சரியாக செயல்பட்டுள்ளதாக, உங்கள் கட்சி தவிர்த்து, பிற கட்சித் தலைவர்கள் பாராட்டுகின்றனரே...' என, கூறத் துாண்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE