ஈரோடு: உடல் நலம் பாதித்த மகனுடன் வந்த தாய், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். நம்பியூர், தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி காளியம்மாள், 70. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் மகன் சோமசுந்தரத்தை, 54, ஆம்புலன்சில் அழைத்து வந்து, ஈரோடு எஸ்.பி., தங்கதுரையிடம் அளித்த மனு: என் கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதன்பின் மாமியார் கருப்பாயியும் இறந்து விட்டார். என் மகனுடன் வசித்து வருகிறேன். மாமியார் சாலை பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பணத்தை, வங்கியில் டிபாசிட் செய்திருந்தார். நான் கூலி வேலைக்கு சென்று மாமியாரையும், உடல் நலம் பாதிக்கப்பட்ட மகனையும் கவனித்து வந்தேன். மாமியாரின் உறவினரான சுப்பிரமணி, ஆசை வார்த்தை கூறி, வங்கியில் டிபாசிட் செய்த பணம், வீட்டில் இருந்த நகை, வீடு, நிலத்தை அவரது பெயருக்கு, என் மாமியாரிடம் கையெழுத்து பெற்று எழுதி வாங்கி கொண்டார். இதுகுறித்து, நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில், 2015 ஜன.,5ல், புகாரளித்தேன். போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சுப்பிரமணி போலீசாரிடம், சொத்து தொடர்பாக எப்போது கேட்டாலும் கையெழுத்து போட்டு, என் மகனுக்கு எழுதி கொடுப்பதாக வாக்குமூலம் அளித்தார். மகனின் உடல் நிலை மோசமாக உள்ளதால், மருத்துவ செலவுக்காக சொத்தை விற்பதற்காக சுப்பிரமணியிடம் கேட்டேன். உன் மகன் இறந்ததற்கு பிறகு, கையெழுத்து போடுகிறேன். அதன்பின் என்னையும் கொலை செய்து விடுவதாக, மிரட்டும் வகையில் பேசினார். எங்கள் சொத்தை மீட்டு, பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE