சேலம்: கட்டணம் குறைவு என்பதால், பயணியர், தனியார் பஸ்களுக்கு படையெடுக்கின்றனர். இதை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், போக்குவரத்துக்கழகங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக, தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
தமிழகத்தில், கொரோனா தாக்கம் தொடங்கிய, கடந்த மார்ச்சுக்கு முன் வரை, அரசு பஸ்களில் தினமும், 1.20 கோடி பேர் வரை பயணித்தனர். தற்போதைய நிலையில், 60 லட்சம் பேர் மட்டும் பயணிக்கின்றனர். இதற்கு, விரைந்து செல்லும் தனியார் பஸ்களில் உள்ள கட்டணத்தை விட, குறைந்த வேகத்தில் இயங்கும் அரசு பஸ்களில், கட்டணம் அதிகமாக உள்ளதே காரணம். இதனால், குறைந்த அளவில் பயணிப்போரும், தனியார் பஸ்களையே விரும்புகின்றனர். குறிப்பாக, சேலத்தில் இருந்து, தர்மபுரி மாவட்டம், அரூருக்கு, தனியார் பஸ்சில், 44 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்சில், 'எக்ஸ்பிரஸ்' என தெரிவித்து, 65 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால், தனியார் பஸ்களுக்கு பயணியர் படையெடுப்பதால், அரசு பஸ்கள் வெறிச்சோடி, இயங்குவதால் வருவாய் இழப்பை சந்திக்கின்றன.
இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தனியார் பஸ்களில், ஆடியோ, வீடியோ பாடல்கள், வை - பை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதோடு, குறிப்பிட்ட நேரத்தில் பயண தூரத்தை அடைகின்றன. கட்டணமும் குறைவாக உள்ளது. அரசு பஸ்களில், அந்த வசதிகள் இல்லாத நிலையில், எக்ஸ்பிரஸ், பாய்ன்ட் டூ பாய்ன்ட், 1 டூ 1 உள்ளிட்ட, 'ஸ்டிக்கர்' ஒட்டி, தனியார் பஸ்களின் கட்டணத்தை விட, 30 முதல், 40 சதவீதம் அதிகமாக வசூலிக்கின்றன. இவற்றை, அதிகாரிகள் சரிசெய்யாமல், தனியார் பஸ்களின் வருவாய் உயர்வுக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கின்றனர். அத்துடன், ஒரே தடத்தில், அதிகளவில் அரசு பஸ்கள் இயங்கும் நிலையில், கூட்டம் இல்லாமல் இயக்கப்படுவதையும் கண்டுகொள்வதில்லை. அதிகாரிகளால், போக்குவரத்துக்கழகங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE