பெங்களூரு: ''சுகாதார துறை அமைச்சர் சுதாகருக்கும், எனக்கும் நல்ல நட்பு உள்ளது. எங்களிடையே பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்,'' என தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.கொரோனா தொற்று பரவி வரும் வேளையில், ஜன., 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., 2ம் ஆண்டு வகுப்புகள் துவக்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கிடையில், சுகாதார துறை அமைச்சர் சுதாகர், பள்ளிகள் திறப்பு குறித்து மீண்டும் ஒருமுறை ஆலோசிப்பதாக கூறியிருந்தார்.இதனால், பெற்றோரும், மாணவர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர். தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமாருக்கும், சுகாதார துறை அமைச்சர் சுதாகர் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என தகவல்கள் வெளியானது.இது குறித்து அமைச்சர் சுரேஷ் குமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:தொடக்க கல்வி, சுகாதார துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கு முன், இருவரும் ஆலோசித்து தான், முதல்வரின் வழிகாட்டுதல் படி செயல்படுகிறோம்.மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி தீர்மானம் எடுக்கிறோம். எங்கள் இருவர் இடையேயான நட்பு நன்றாக உள்ளது. சில ஊடகங்களில், எங்களிடையே பிளவு ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது.பெங்களூரை மையமாக வைத்து மட்டும், முடிவெடுக்க முடியாது. கிராமங்களில், பள்ளிகள் திறக்காததால், பால்ய திருமணங்களும், குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்துள்ளனர். இதை தடுக்கவே, பளளிகள் திறக்க முடிவு செய்துள்ளோம்.சிலர் தேவையின்றி குழப்பம் ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். பள்ளிகள் திறந்தே ஆக வேண்டும் என்று நான் அடம் பிடிக்கவில்லை. நிலைமை எனக்கும் தெரியும்.ஆனால், கிராமங்களில் உள்ள மாணவர்களின் நலனும் முக்கியம். சமீபத்தில், நீதிமன்றமும், அனைத்து வகுப்புகளையும் ஏன் துவக்க கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE